செய்திகள் :

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

post image

அரசியலில் பரபரப்புக்கு மேல் பரபரப்பாகத் தொடர்ந்து ஏதாவது நடந்துகொண்டேயிருக்கிறது, திட்டமிட்டோ, திட்டமிடாமலோ.

யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

திடீரென, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான அரசமைப்பின் 130-வது திருத்த சட்ட முன்வரைவுகள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

இந்த முன்வரைவுகள் பற்றி முந்தைய நாளில்தான் மக்களவைச் செயலருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதுகிறது, அவசர அவசரமாக மறுநாளே மக்களவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அப்படியே நெக்ஸ்ட், நெக்ஸ்ட்...

சாட்டப்படும் குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை, குற்றம் சாட்டிக் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டாலே போதும், 31-வது நாள் அவருடைய பதவி பறிபோய்விடும் (சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டால், இழந்த பதவியை அவர் மீண்டும் பெற முடியும் என்று எக்ஸ் தளத்தில் ‘ஆறுதல்’ தெரிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா).

ஒருவேளை இந்தப் பதவிப் பறிப்புச் சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால் எப்படி இருக்கும்?

ஒருவரை – பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் - கைது செய்வதையும் சிறையில் வைப்பதையும் ஆட்சியிலிருந்து அகற்றுவதையும் இனிமேல் ‘சட்டப்படியே’ செய்து விடலாம். போலியான குற்றச்சாட்டுகளே போதுமானவை, கைது செய்யவும் சிறை வைக்கவும். நிரூபிக்க வேண்டியதெல்லாம் இல்லை, தீர்ப்புக்காகக் காத்திருக்கவும் வேண்டாம்.

மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்றால் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை எல்லாம் பேரம் பேசவும் வேண்டாம், விலை கொடுத்து வாங்கவும் வேண்டாம். தலைமையையே ‘அலாக்காகத் தட்டித் தூக்கிவிட்டால்’, ஆட்டோமேட்டிக்காக அத்தனை பேரும் வந்து விழுந்துவிடப் போகிறார்கள்... இருக்கவே இருக்கிறது, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எல்லாம்.

‘தார்மிகப் பொறுப்பு’, ‘நோக்கம்’ என்றெல்லாம் அரசு சொல்வது ஒருவேளை நியாயமெனக்கூட வாதிடப்படலாம். ஆனால், இந்தியா போன்ற தனித்துவம் மிக்க மாநிலங்கள், செல்வாக்கு மிக்க மாநிலக் கட்சிகள், பன்மைத்துவம் கொண்ட மக்கள் சமுதாயங்கள் இருக்கிற, கூட்டாட்சி அமைப்பினால் மட்டுமே வலுப்பெற்றிருக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் அந்த முறைமையையே குலைத்து, அடிப்படையைத் தகர்த்துவிடும் ஆபத்து இருக்கிறது.

மத்திய அரசு அல்லது குடியரசுத் தலைவர் நினைத்தால், ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, முதல்வரை ஆட்சியிலிருந்து அகற்ற முடியும் என்கிறபோது, வழக்குப் பதியவும் சிறை வைக்கவும் தேவையான எல்லா அதிகார அமைப்புகளும் மத்திய அரசின் வசம் இருக்கும் நிலையில், ஒரு மாநிலத்துக்கான தனித்துவமும் தன்னதிகாரமும் என்னவாகும்?

கடந்த 11 ஆண்டுகளில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவரையுமே மத்திய விசாரணை அமைப்புகள் கைது செய்யவில்லை. ஒருவர்கூடவா தவறு செய்யவில்லை? கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் (2014-க்குப் பிறகு அமலாக்கத் துறை பதிந்துள்ள வழக்குகளில் 95 சதவிகிதம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான்). மாறாக, எதிர்க்கட்சிகளில் இருந்த வரையிலும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டவர்கள்கூட  பாரதிய ஜனதாவில் ஐக்கியமானதும் அல்லது அனுசரித்துப் போனதும் சலவைக்குப் போய்வந்த சட்டைகளாக மாறிவிடுகின்றனர்.

என்ன காரணங்கள் சொன்னாலும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அதிகார அமைப்புகள் ஏவிவிடப்படுவதாகக் குற்றம் சாட்டப்படும் சூழலில், இந்த சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.

தற்போதைய நடைமுறையில் விசாரணைக்குப் பிறகு குற்றமிழைத்ததாக நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே ஒருவரைத் தகுதி நீக்கம் செய்யவோ, தண்டிக்கவோ முடியும். அல்லாமல், குற்றம் சாட்டப்பட்டுவிட்டதாலேயே, 30 நாள்கள் சிறையில் இருந்ததாலேயே, ஒருவரை அகற்றுவது சிறிதும் ஏற்கத்தக்கதாக இருக்க முடியாது. இதை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவு தெளிவாக உறுதி செய்கிறது. ஆனால், புதிய சட்டம் வந்தால் யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம்.

யார் மீது வேண்டுமானாலும் கிரிமினல் குற்றங்களை, குறிப்பாக, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசு அமைப்புகளால், சாட்ட முடியும், கைது செய்யவும் முடியும், ஒரு மாதம் என்ன? ஓராண்டுக்கு மேலும்கூட பிணையில் விடாமல் சிறையிலேயே வைத்திருக்கவும் முடியும்! பிறகென்ன, ஆட்டம் குளோஸ். பதவியிலிருந்து நீக்கி விடலாம்.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இரு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டிருந்தார் தில்லியின் ஆம் ஆத்மி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின். ஆனால், நான்கு ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு குற்றம் எதுவும் கண்டறியப்படவில்லை என்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ‘கண்டுபிடிப்பை’ நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அப்படியானால், அவர் சிறையில் கழித்த காலம்? பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்பவர்கள், கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பவர்களை என்ன செய்யலாம்? இந்த பாணி எதிர்காலத்தில் தொடராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் என எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மட்டும் அல்ல; கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் ஆந்திரம், பிகார் போன்ற மாநிலங்களுக்கும்கூட, அதாவது மாநிலங்களின் முதல்வர்களுக்கும்கூட இது எச்சரிக்கைதான். தேவைப்பட்டால் சொந்தக் கட்சியைச் சேர்ந்த  முதல்வர்களுக்கேகூட, தங்களை எதிர்ப்பவர்கள் என்றால் ஓரங்கட்டுவதற்காக  செக் வைக்கவும் செய்யலாம்.

பொதுவாகப் பார்க்கும்போது, பிரதமரை யாரும், எதற்காகவும் கைது செய்யப் போவதில்லை, ஏனெனில், கைது செய்யக்கூடிய அமைப்புகள் எல்லாம் மத்திய அரசின் வசமிருப்பவையே. ஆனால், எதிர்காலத்திலும் இவ்வாறே இருக்க வேண்டும்; இருக்க முடியும் என்று உறுதியாக எதிர்பார்க்க முடியாதுதானே?

இந்தச் சட்ட முன்வரைவுகள் எல்லாம் எப்படியாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதாலோ என்னவோ, தற்போதைய முன்வரைவின் வரையறைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டுவரப்படக் காணோம். ஒருவேளை எதிர்காலத்தில் எம்பிக்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் இது பொருந்திப் போக நேர்ந்தால், நிறைய கட்சித் தாவல்களைக் காணலாம்; ‘அதற்கு சரியாக வராவிட்டால்’ நிறைய இடைத்தேர்தல்களையும் கண்டு மகிழலாம்.

பரபரப்பான பதவிப் பறிப்புச் சட்ட விவாதங்களுக்கு இடையே இன்னும் இரண்டு விஷயங்கள் உயிர்ப்புடன்தான் இருக்கின்றன – ஒன்று, ஆளுநர், குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிவைத்த 10 சட்ட  முன்வரைவுகளுக்கு ஒப்புதல் தராமல் காலந்தாழ்த்திய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர்களின் அதிகாரத்துக்குக் கடிவாளமிடும் வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மிகக் கறாரான தீர்ப்பொன்றை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் வழங்கினர். ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கும் நீதிமன்றமே ஒப்புதலளித்து சட்டமாக்கியது. அல்லாமல் பேரவைகள், மக்களவை நிறைவேற்றி அனுப்பும் சட்ட முன்வரைவுகளுக்கு 30 நாள்களிலிருந்து 3 மாதங்களுக்குள் ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று காலவரம்பு நிர்ணயித்து, வரன்முறைகளையும் அறிவித்தது.

ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டு மறு ஆய்வுக் கோரிக்கைக்கான கால அவகாசம் எல்லாம் முடிந்த பிறகு, திடீரென தெளிவுரை கோரி, 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுதிய கடிதத்தின் மீது கடந்த சில நாள்களாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆளுநருக்கான அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரான (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். கால வரம்பு நிர்ணயிப்பதன் மூலம் ஆட்சி அதிகாரத்தின் எல்லைக்குள் உச்ச நீதிமன்றம் தலையிடுவதாக மத்திய அரசுக்காகக் குற்றம் சாட்டுகிறார். ஆளுநர்கள் கடமையைச் செய்யாவிட்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கச் சொல்கிறீர்களா? என்று பதிலுக்கு வினா எழுப்பியிருக்கிறார்கள் நீதிபதிகள். விஷயம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரையும் முதல்வர்களையும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவையும் பேரவைகளும்தான் அகற்ற முடியும். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பிலான வாதங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்களுக்குத் தொடர்பில்லாத, மத்திய அரசால் நியமிக்கப் பெறுகிற, ஆளுநர்களைக் கொண்டு கவிழ்ப்பது அல்லது முடக்கிவைப்பது பற்றிச் சிந்திப்பதாகத் தோன்றச் செய்கின்றன.

 இன்னொன்று, வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளும் எதிர்வினைகளும்.

ஏற்கெனவே, தேர்தல் ஆணையர் நியமன முறையையே மாற்றியாகிவிட்டது. தேர்வுக் குழுவில் இருந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமர் (தலைவர்), பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் என்றானதன் மூலம் ஆளுங்கட்சியின் விருப்பத் தேர்வு மட்டுமே எப்போதும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையேற்பட்டுவிட்டது. ஆக, மத்திய அரசு அல்லது ஆளுங்கட்சியால் பிடித்து வைக்கப்படுபவர்தான் பிள்ளையார்!

ஒரு மணி நேரத்துக்கும் மேலான செய்தியாளர்கள் சந்திப்பில், வாக்காளர் பட்டியலின் உதவியுடனேயே, வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்துக்கும் ஆளும் பாரதிய ஜனதாவுக்கும் உறவு இருப்பதாகத் தெரிவித்தார்.

துண்டு துண்டாக எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தது தேர்தல் ஆணையம். பிகாரில் ராகுல் காந்தி வாக்குரிமைப் பிரசாரப் பயணம் தொடங்கிய நாளில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ராகுல் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை; செய்தியாளர்களின் மேலும் பல கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. மாறாக, அரசியல் கட்சித் தலைவரைப் போல அவரே நிறைய கேள்விகள் எழுப்பினார், ராகுல் காந்திக்கும் சேர்த்து.  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சொற்களில் குறிப்பிட்டால், இந்தியா கூட்டணி எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாகக் கூடுதலான கேள்விகளைத்தான் எழுப்பியிருக்கிறது தேர்தல் ஆணையரின் சந்திப்பு.

இதே காலத்தில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு கேள்வி! ஒரு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய காங்கிரஸுக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது; தேவைப்படுகிறது. ஆனால், பாரதிய ஜனதாவால் மட்டும் ஆறு மக்களவைத் தொகுதிகளின் (சுமார் 30 பேரவைத் தொகுதிகள்) வாக்காளர் பட்டியலை எவ்வாறு 6 நாள்களில் ஆய்வு செய்ய முடிகிறது? தேர்தல் ஆணையத்துக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன நெருக்கம்?

மீண்டும் சட்ட முன்வரைவுகளிடம் வரலாம்.

அரசியலமைப்புத் திருத்த முன்வரைவு என்பதால், இந்திய அரசியல் சாசனத்தின் 368-வது பிரிவின்படி, இந்த (130-வது திருத்த) சட்ட முன்வரைவு நிறைவேற,

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். எனவே, இவை சட்டங்களாகும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு அல்லது இல்லை என்றாலும்கூட இப்போது இப்படியொரு முன்வரைவைக் கொண்டுவருவதன் நோக்கம், காரணம் என்னவாக இருக்க முடியும்?

ஆட்சி அதிகாரத்தின் உயர்நிலையில் ஊழலை வேரறுக்கவே சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது. நல்ல நோக்கம் என்று கூறுவதாலேயே நல்ல பலனைத்தான் தரும் என்றும் கூறிவிட முடியுமா?  

கைது செய்து ஒருவரை உள்ளே வைத்துவிட்டால், ஒரு மாத காலத்துக்குள் எல்லாவற்றையும் தேவையானபடி மாற்றி அமைத்துவிட முடியும். சீட்டுக் கட்டிலிருந்து எந்தச் சீட்டை வேண்டுமானாலும் எடுத்து எதனுடனும்  சேர்த்துவிடலாம். இன்னும் சொல்லப் போனால், காலம் நேரம் பார்த்து இந்தச் சீட்டுகள் எல்லாம் தானாகவேகூட சேர வேண்டிய இடத்தில் சென்று சேர்ந்துகொண்டுவிடக் கூடும்.

நம்முடைய நிர்வாக அமைப்பில் ஒரு காவல்துறை உதவி / ஆய்வாளருக்கே வானளாவிய அதிகாரம் இருக்கிறது; கைக்கொள்ள முடியும். ஒரு வழக்கின் விசாரணை அதிகாரி அவர்தான் என்கிறபோது, அவர் யாரிடமிருந்து வேண்டுமானாலும் புகாரைப் பெற்று, யார் மீது வேண்டுமானாலும் வழக்குப் பதிந்து, யாருடைய அனுமதியையும் எதிர்பாராமலேயே, யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்துவிட முடியும்.

ஒரு நீதிபதியும் சில வழக்குரைஞர்களும் நினைத்தால் யாரை வேண்டுமானாலும்  ஒரு மாதம் என்ன, எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் சிறையை விட்டு வெளியே வர முடியாமல் பார்த்துக்கொண்டுவிட முடியும். இவர்களுடன் மேலிடமும் சேர்ந்துகொண்டால், அனுக்கிரகமும் ஆசீர்வாதமும் இருந்தால்,  எல்லாவற்றையும் துல்லியமாக இயக்கிவிட முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எளிதில் சீர்குலைக்கப்படும் அபாயம் நிரந்தரமாகிவிடும்.

எப்படியோ, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தையும் தேர்தல் ஆணையத்தின் ‘வாக்குத் திருட்டு’ விஷயத்தையும் பேசிக்கொண்டிருந்த மக்கள் இனி இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இருக்கட்டும்.

போகிற போக்கில், மக்களவையோ, மாநில சட்டப்பேரவைகளோ, பிரதமரோ, முதல்வரோ - குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் நினைத்தால் மாற்றவோ, திருத்தவோ, நிறுத்திவைக்கவோ, தேவைப்பட்டால் செயற்பாடுகளை முடக்கவோ முடியும் என்றால்...

தேர்தல் ஆணையம் வெளியிடுவதுதான் வாக்காளர் பட்டியல், சொல்பவர்கள்தான் வாக்காளர்கள். தேர்தலுக்குப் பின் வெளியிடுவதுதான் முடிவு என்றால்...

மத்திய அரசு அல்லது மத்தியில் ஆட்சியில் இருப்போர் விரும்பினால்தான் மாநிலங்களில் முதல்வர் அல்லது அமைச்சர்கள் பதவிகளில் தொடர்ந்து இருக்க முடியும் என்றால்...

பிரதமராகவே இருந்தாலும் பிடிக்காமல்போனால் ஒரு வழக்குப் பதிந்து சிறையில்  வைத்து (எத்தனையோ வெளிநாடுகளில் நடந்துகொண்டுதானிருக்கின்றன) பதவியைப் பறிக்க முடியும் என்றால்...

புரியவில்லை. நிறையத் தென்படுகிற புள்ளிகளும் கோடுகளும் எங்கோ  ஓரிடத்தில் சென்று இணைகின்றனவோ? அரசியலமைப்புச் சட்டத்தில் இன்னும் என்னென்ன திருத்தங்கள் வரப் போகின்றன? அல்லது வரிசையில் இருக்கின்றன?

கடைசியாக, மில்லியன் டாலர் கேள்வியொன்று மீதமிருக்கிறது – திரௌபதி முர்முவை அடுத்துக் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போகிறவர் யார்?

இதையும் படிக்க... சொல்லப் போனால்... நாய் படும் பாடு!

Regarding the adverse effects of the Constitution (130th amendment) Bill 2025...

சொல்லப் போனால்... நாய் படும் பாடு!

நாடு விடுதலை பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைய நான்கு நாள்கள் இருக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவொன்று, நம் நாட்டிலுள்ள தெரு நாய்களின் மீதான வன்மத்தை ஒருபுறமும் வாஞ்சையை இன்னொருபுறமுமாகக் கொப்பு... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

அல்லோலகல்லோலம் என்றொரு சொல் அவ்வப்போது எங்கேயாவது இதழ்களில் தட்டுப்படும்; ஏதோ கலவரச் சூழல் என்றளவில் பொருள் புரிந்துகொள்ளப்படும். உண்மையிலேயே என்னதான் பொருள் என்று துழாவினால், இணையத்தில் அழையா விருந்த... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

பரபரப்பாகக் கழிந்திருக்கிறது ஒரு வாரம்... பஹல்ஹாம் படுகொலை பற்றி ஒருவழியாக நாடாளுமன்றத்திலும் பேசியாகிவிட்டது; பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றியிருக்கிறார்.ஏதோ இ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!

மாநிலங்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துகிறார். அவையின் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.மாலை நாலு, நாலரை மணி வரையிலும் வழக்கமான வேலைகள... மேலும் பார்க்க