செய்திகள் :

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

post image

அல்லோலகல்லோலம் என்றொரு சொல் அவ்வப்போது எங்கேயாவது இதழ்களில் தட்டுப்படும்; ஏதோ கலவரச் சூழல் என்றளவில் பொருள் புரிந்துகொள்ளப்படும். உண்மையிலேயே என்னதான் பொருள் என்று துழாவினால், இணையத்தில் அழையா விருந்தாளியாக இப்போது நமக்கு அறிமுகமாகியிருக்கும் செய்யறிவு, அல்லோலம் என்றால் சலசலப்பு, அமளி, ஆரவாரம்; கல்லோலம் என்றால் அலை, கடல் அலைகள் போன்ற பெரிய சலசலப்பு, இரண்டும் சேர்ந்துகொண்டால் பெரிய குழப்பம், ஆரவாரம், பரபரப்பு, கடலலையில் எழுவதைப் போன்ற குழப்பம் என்றெல்லாம் சொல்கிறது.

கடந்த சில நாள்களாக அப்படித்தான் இருக்கிறது நிலைமை!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் அடித்தளமான தேர்தல் நடைமுறையின் அடிப்படையான வாக்காளர் பட்டியலிலேயே பெரிய மோசடி நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

2024 பொதுத் தேர்தலின்போது, கர்நாடகத்தில் ‘பாரதிய ஜனதாவின் வெற்றியை உறுதி செய்வதற்காக’ பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுர பேரவைத் தொகுதியில் (மட்டும்) ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டதாகவும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து வாக்குத் திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் அவர்.

தில்லியில் பெருந்திரளான செய்தியாளர்கள் முன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விடியோ காட்சிகளுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர்  பட்டியலிட்டார்: அபூர்வமான அப்பா பெயர்களில் வாக்காளர்கள், பல மாநிலங்களில் ஒரே எண்ணில் வாக்காளர் அடையாள அட்டைகள், ஒரே தொகுதியில் பல முறை வாக்காளர்களாகப் பதிவு, ஒரே முகவரியில் ஏராளமான வாக்காளர்கள், புகைப்படமில்லாமல், புதிய வாக்காளர் சேர்ப்புக்கான ஆறாம் படிவத்தைப் பயன்படுத்தி மோசடியாக 33,692 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது... என்று தொடர்கிறது பட்டியல்.

தேர்தல் ஆணையத்தின் இந்த வேலைகள், மகாதேவபுரத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே முக்கியமான பல தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு உதவுவதற்காகச் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி எதையும் புதிதாகச் சொல்லவில்லை; எங்கிருந்தோ கண்டுபிடித்துக் கொண்டுவந்தும் சொல்லவில்லை. எல்லாமே தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல்களில் இருப்பவைதான்.

வேறு எந்தவொரு நாடாக இருந்திருந்தாலும் இந்த மாதிரி குற்றச்சாட்டுக்குப் பிறகு என்னவெல்லாம் நடந்திருக்கும்? வாக்குத் திருட்டை அம்பலப்படுத்திய அதே நாள் இரவில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து விவரங்களைத் தெரிவித்த ராகுல், மறுநாளே மல்லிகார்ஜுன கார்கேயுடன்  பெங்களூரில் பெரிய கூட்டத்தையும் திரட்டிக் கேள்விகளையும் எழுப்பினார்.

ஆனால், தேர்தல் ஆணையமோ, இந்தக் கேள்விகளுக்குப் பதிலோ விளக்கமோ  சொல்லாமல் மிரட்டும் தொனியில், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை உறுதிமொழிப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் என்று தொடங்கி, பின்னர் படிப்படியாக ஆணையரும் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதனிடையே, மகாராஷ்டிரம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களின் தேர்தல் ஆணைய இணையதளங்களில் இருந்த இ-வாக்காளர் பட்டியல்கள் காணாமல் போய்விட்டன. ‘இந்தப் பக்கம் இல்லை’, ‘இந்த இணையதளத்தைப் பார்க்க இயலாது’ என்று வந்துகொண்டிருக்கின்றன. மேற்கு வங்கப் பக்கம் எரர் காட்டுகிறது. ஹரியாணா கிடைக்கவேயில்லை. இவற்றையெல்லாம் சமூக ஊடகங்களில் ‘ஸ்கிரீன் ஷாட்’களாக மக்கள் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையமோ இவற்றுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததைப் போல இருக்கிறது.

அப்படியானால், திடீரென எவ்வாறு இந்தப் பக்கங்கள் எல்லாம் காணாமல் போகின்றன? இன்னும் இதுபோன்று நிறைய மகாதேவபுரங்களின் கதைகள் வெளிப்பட்டுவிடக் கூடும் என யாரேனும் அச்சம் கொள்கிறார்களா? எவ்வளவு மோசமான நிலைமையில் நம்முடைய தேர்தல் நடைமுறைகளும் வாக்காளர் பட்டியல்களும் இருக்கின்றன?

ஒரு குறையை, குற்றச்சாட்டைச் சொன்னால், யார் எவர் என்பதையெல்லாம் தாண்டி, எங்கே, ஏது எனக் கேட்டுத் தீர்த்துவைக்க முயலுவதற்குப் பதிலாக, சட்டப்படியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறது  தேர்தல் ஆணையம்.

ராகுல் காந்தி சொன்னவற்றில் பெரும்பாலான தரவுகள், வாக்காளர் பட்டியல்களில்  இருந்து திரட்டப்பட்டவையே. இல்லாத எதையும் சொல்லவில்லை. அப்பா பெயர் எக்ஸ்ஒய்இசட் என்பதிலிருந்து எல்லாமே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதுதானே. ஜஸ்ட், தேர்தல் ஆணையத்தின் ஒரு தொகுதி வாக்காளர் பட்டியலை ராகுல் காந்தி பிரித்து மேய்ந்திருக்கிறார் (டீகோட் –  decode செய்திருக்கிறார்), அவ்வளவுதான்.

தேர்தல் ஆணையத்தின் 2025 ஆம் ஆண்டு வாக்காளர் இறுதிப் பட்டியலில் ஆதித்ய ஸ்ரீவாஸ்தவா என்ற ஒருவரின் பெயர், லக்னௌவில் இருக்கிறது, மகாராஷ்டிரத்தில் இருக்கிறது, மகாதேவபுரத்தில் இரு வெவ்வேறு பகுதிகளில் இருக்கிறது! ஓரிடத்தில் சேர்க்கிறார்கள், ஓரிடத்தில் நீக்குகிறார்கள், இன்னோரிடத்தில் சர்வமும் குழப்பமயம். தேர்தல் ஆணையத்தில் என்ன நடக்கிறது? யாருக்கும் புரியவில்லை.

பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியத் தேர்தல் ஆணையம்தான், எந்திரத்தால் – கணினி மென்பொருளால் - வாசிக்கக் கூடியதாக வாக்காளர் பட்டியலைத் தர மறுக்கிறது (அப்படி இருந்தால் எளிதில் பல விஷயங்களைக் கண்டறிய முடியுமாம்!). பிற நாடுகளில் எல்லாம் தேடக் கூடியதாகவும், சரிபார்க்கக் கூடியதாகவும் வாக்காளர் பட்டியல்கள் இருக்கின்றன (எண்ம வடிவில் பகிர்வதில் இங்கே என்ன பிரச்சினை? ஏன் அஞ்சி விலகுகிறது?).

நாட்டின் வாக்காளர் பட்டியல்களுக்குத் தேர்தல் ஆணையம்தானே பொறுப்பு?  போலி வாக்காளர்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அதன்  கடமைதானே. அல்லாமல் வேறு யாரால் இதைச் செய்ய முடியும்? வாக்காளர் பட்டியல் மிகச் சரியாகத்தான் இருக்கிறது; தவறுகள் எதுவுமில்லை என்று மக்களுக்கு உறுதிபடச் சொல்ல வேண்டியவர்களே, சொல்கிற குற்றச்சாட்டையும்  உறுதிமொழிப் பத்திரத்துடன் புகாராக எழுதித் தருமாறு கேட்டால்...

(ரொம்பவும் நெருக்கிப் பிடித்தால் தேர்தல் ஆணையம் தப்பித்துக்கொள்ளவும் முயலும். தங்களுக்கெனத் தனி ஊழியர்கள் இல்லை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்பிதான் நாங்களே இருக்கிறோம் என்றெல்லாம்கூட கூறலாம். ஆனால், இது எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்?)

ஏற்கெனவே, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பற்றிய பஞ்சாயத்தே இன்னமும் முடிந்தபாடாக இல்லை. பெரும்பாலான ஜனநாயக நாடுகள் எந்திரத்தை நம்ப முடியாது என்று ஒரேயடியாகத் தலைமுழுகிவிட்டு மறுபடியும் காகித வாக்குகளுக்குத் திரும்பிவிட்டன.

இவற்றுக்கு நடுவே, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் சர்ச்சைக்குரிய சிறப்பு முனைப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் லட்சம் லட்சமாக வாக்காளர்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று வேறு எதிர்க்கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன.

ராகுல் காந்தி குற்றம் மட்டும் சாட்டவில்லை. பல்வேறு விஷயங்களை  அம்பலப்படுத்தியிருக்கிறார் என்று வைத்துக்கொண்டால், பதில் சொல்ல வேண்டிய இடத்தில் தேர்தல் ஆணையம்தானே இருக்கிறது. பொத்தாம்பொதுவாக எல்லாவற்றையும் எவ்வாறு நிராகரிக்க முடியும்?

தேர்தலை ஆணையம்தானே பொறுப்பேற்று நடத்துகிறது? அப்படியானால், தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அச்சங்களை, சந்தேகங்களை – ராகுல் காந்தி மட்டுமல்ல - யார், எப்போது எழுப்பினாலும் தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதுதானே.

இவை எதுவும் போகிற போக்கில் புறந்தள்ளிவிட்டுச் செல்கிற விஷயங்கள் அல்ல. தேர்தல் ஆணையம் என்பது அரசின் ஒரு துறையும் அல்ல; அங்கமும் அல்ல. ஆளுங்கட்சியுடையதும் அல்ல. அரசியல் சாசனப்படியான சுய அதிகாரம் கொண்ட அமைப்பு.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று வெறுமனே பெருமைப்பட்டுக் கொள்வதில் பயனில்லை; பெருமைக்குரிய இத்தகைய தேர்தலை நடத்துகிற அமைப்பும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதில் கொஞ்சமாவது பொருள் இருக்க வேண்டுமானால் அதற்கு ஆதாரமான தேர்தல்கள் நியாயமாக, நேர்மையாகத்தான் நடத்தப் பெறுகின்றன என்று ராகுல் காந்தி மட்டுமல்ல; ஆளும் ஒவ்வோர் அரசையும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிற ஒவ்வொரு சாதாரண குடிமகனும்கூட நம்ப வேண்டும்; நம்பும்விதமாகத் தேர்தல் ஆணையமும் இருக்க வேண்டும்; மட்டுமல்ல, நடந்துகொள்ளவும் வேண்டும்.

சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டியது சீசரின் மனைவி மட்டும் அல்ல; இந்தியத் தேர்தல் ஆணையமும்கூடத்தான்!

முந்தையது அல்லோலம் என்றால் பிந்தையது கல்லோலம்!

சொன்னபடி கேட்காமல் ரஷியாவிடமிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்கிறீர்கள் அல்லவா? பிடியுங்கள் தண்டம். இனிமேல் நீங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கெல்லாம் 50% வரி என்று அறிவித்துவிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். 9, 10-லிருந்து 25, இப்போது ஐம்பது!

25 சதவிகிதத்தையே தாக்குப் பிடிக்க முடியாது, ஐம்பதானால் அவ்வளவுதான் என்று நிலைகுலைந்துள்ளனர் இந்தியத் தொழில்துறையினர்.

இதனால், அமெரிக்காவுக்கான ஜவுளி – ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி பெரிய அடிவாங்கும். ஏனென்றால் நமக்குப் போட்டியாக ஏற்றுமதி செய்யும் வங்க தேசம், வியத்நாம் போன்றவற்றுக்கெல்லாம் மிகவும் குறைந்த, நம்மைவிட மூன்றிலொரு பங்கு வரிதான். ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கும் திருப்பூர் போன்றவற்றுக்கு இது பெரும் பேரிடி. ஆடைத் தயாரிப்புத் துறையில் மட்டுமே 20 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகின்றன.

டிரம்ப்பின் இந்த அதிரடிகளால், கணினி மென்பொருள்கள், செல்போன்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், காலணிகள் போன்ற துறைகளும் பெரும் தவிப்பில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றைத் தாண்டி மருந்துகளுக்கும் மருந்துப் பொருள்களுக்கும் விரைவில் 250% வரி விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை அவ்வாறு நேரிட்டால் இன்னும் பெரும் பாதகம்தான்.

இவற்றின் தொடர் விளைவுகளாக நாட்டின் தொழில் உற்பத்தி, சார்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் எனப் பலவும் சிக்கலில் மாட்டிக்கொள்ள, பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் தலைவிரித்தாடுகிறது.

ஆனால், இவ்வளவு கல்லோலத்துக்கு இடையே இந்தியத் தரப்பிலிருந்து இதுவரையிலும் யாரும் நேரடியாகவோ, உறுதியாகவோ எதிர்வினையாற்றத் தயங்குகிறார்கள். மறைமுகமாக, சூசகமாகத்தான் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால்தான் தண்டனை என்று வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார் டிரம்ப். குறைந்த விலைக்கு வாங்கி, சுத்திகரிப்புக்குப் பின், கூடுதல் விலைக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்றும் குற்றச்சாட்டு.

மாறாக எண்ணெய் பற்றி எதுவும் குறிப்பிடாமல், நிகழ்ச்சியொன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, இந்திய வேளாண் பொருள்களையோ, பால் பொருள்களையோ யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். உள்ளபடியே, இது ஏற்கெனவே இரு நாடுகள் இடையே முன்னரே பேசப்பட்ட ஒரு விஷயம்.

வேளாண் சிறப்புச் சட்டங்களுக்கு எதிராக ஐந்தாண்டுகளுக்கு முன்னரே  விவசாயிகள் போராடினார்கள்; இன்னமும் போராடிக் கொண்டுதானிருக்கிறார்கள். 2019-ல் விவசாயிகளையும் பால் உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் வகையில், தாராள வணிகத்தை அனுமதிக்கும் விரிவான வட்டார பொருளாதார ஒத்துழைப்பு (ஆர்சிஇபி) அமைப்பில் அரசு கையெழுத்திடவிருந்தது; எனினும், தொடர் போராட்டங்கள் காரணமாகத்தான் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

ஆனால், இப்போது விவசாயிகளுக்காக எதையும் சந்திக்கத் தயார் என்று மோடி பேசியிருக்கிறார். எல்லாம் புரியாத புதிராக ஏதோ இருக்கிறது.

ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யில் பெரும் பகுதி ஒரு  தனியார் நிறுவனத்துக்குத்தான் வழங்கப்படுகிறது; மிகவும் குறைந்த அளவிலேயே அரசுத் துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆக, இந்த இறக்குமதி – ஏற்றுமதியால் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்குத்தான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பெரும் லாபம். ஆனால், எண்ணெய்யில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது பற்றி வெளிப்படையாகத் தெரியவில்லை.

இதுவரையிலும் 30-க்கும் மேற்பட்ட முறை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட தாம்தான் காரணம் என்று அதிபர் டிரம்ப் கூறிவிட்டார். இந்தியத் தரப்பிலிருந்து இதையும் நேரடியாக மறுக்கத் தயங்குகிறார்கள்.

என்னவோ, பதவிக்கு வந்த நாள் முதல் இந்தியாவைப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறார் அதிபர் டிரம்ப். இவ்வளவு காலம் நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமான நண்பராக அறியப்பட்ட / அறிவிக்கப்பட்ட டிரம்ப், இப்போது மட்டும் ஏன் இந்தியாவை இவ்வாறு வருத்துகிறார்? நம்முடைய உண்மையான நிலைமைதான் என்ன?

வால் நறுக்கு: இந்த அல்லோலகல்லோலத்தில் விடுபட்ட இன்ட்ரஸ்ட்டிங்கான இன்னொரு விஷயம், சீன ஆக்கிரமிப்பு -  ராணுவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்ததற்காக ராகுல் காந்தியை, நீங்கள் உண்மையான இந்தியனா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் கேட்டது. யுவர் ஹானர், சாதாரண இந்தியன்னு சொல்லிக்கிறதுக்கே நாட்டிலே தனிப்பட்ட ஆவணம் எதுவுமில்லை; ‘ஆதார் அட்டையா, அதெல்லாம் ச்சும்மா, செல்லாது செல்லாதுன்னு’ சொல்லீட்டாங்க. இப்போ இந்தப் புது சர்டிபிகேட்டுக்கு என்ன செய்யறது, எங்கே போறது?

இதையும் படிக்க... சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

On Rahul's allegations against the Election Commission, Trump's 50% tax and the consequences...

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

பரபரப்பாகக் கழிந்திருக்கிறது ஒரு வாரம்... பஹல்ஹாம் படுகொலை பற்றி ஒருவழியாக நாடாளுமன்றத்திலும் பேசியாகிவிட்டது; பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றியிருக்கிறார்.ஏதோ இ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!

மாநிலங்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துகிறார். அவையின் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.மாலை நாலு, நாலரை மணி வரையிலும் வழக்கமான வேலைகள... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்குபெறுவீர்களா? – தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்தக் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த பதில் –... மேலும் பார்க்க

தமிழக சிறைகளில் விரைவில் "டாமினன்ட்' கோபுரங்கள்!கைதிகளின் கைப்பேசி ராஜ்ஜியத்தை ஒழிக்க நடவடிக்கை

தமிழக சிறைகளில் கைப்பேசி சிக்னல்களை முற்றிலுமாக முடக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் "டாமினன்ட் டவர்ஸ்' என்ற தொழில்நுட்பம் மூலம் இயங்கும் வலையமைப்புக் கோபுரங்கள் (நெட்வொர்க் டவர்ஸ்) அமைக்கப்பட உள்ளன.தமி... மேலும் பார்க்க

காங்கிரஸில் சித்தராமையா சிக்கல்!

'கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புரட்சி வெடிக்கும்' என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதை தொடர்ந்து,... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஆதார், வெறும் அட்டைதானா?

‘ஆதார் அட்டையா? அதெல்லாம் செல்லாது, செல்லாது!’ என்று வெண்ணிலா கபடிக் குழு பரோட்டா சூரி தொனியில் மறுத்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நிலைப்பாட்டால் அதிர்ந்துபோயிருக்கிறார்கள் மக்கள்.இந்த ஆண்டு ... மேலும் பார்க்க