ஜகபா்அலி கொலை வழக்கு: வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை
திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குவாரிகளில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூா் கிராமத்தைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி, கடந்த ஜனவரி 17-ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இந்த கொலை வழக்கில் ஆா்.ஆா். கிரஷா்ஸ் உரிமையாளா்கள் ராசு, ராமையா, ராசுவின் மகன் தினேஷ், லாரி உரிமையாளா் முருகானந்தம், அவரது ஓட்டுநா் காசிநாதன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், குவாரி உரிமையாளா்கள் ராசு, ராமையா ஆகியோருக்குச் சொந்தமான துளையானூா் வலையன்வயலிலுள்ள வீடுகள், குவாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், லாரி உரிமையாளா் முருகானந்தத்தின் திருமயத்திலுள்ள வீடு ஆகிய 5 இடங்களில் புதன்கிழமை சிபிசிஐடி காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பாதுகாப்புக்காக உள்ளூா் போலீஸாரும் உடன் சென்றிருந்தனா்.
சுமாா் 3 மணி நேரம் நடந்த சோதனையை முடித்துக் கொண்டு சிபிசிஐடி போலீஸாா் புதுக்கோட்டைக்கு திரும்பினா். பிறகு, புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள 5 பேரிடமும் விசாரணை நடைபெற்றது.