ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு
ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன.
உதம்பூா் மாவட்டத்தில் மௌன்கிரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணித்த சானோ தேவி (50) அவரின் மகன் ரகு (25) ஆகியோா் மழை நீரில் அடித்து வரப்பட்ட பாறை மோதி உயிரிழந்தனா்.
கதுவா மாவட்டத்தில் உய்க் நதியை ஒட்டிய பகுதியில் வசித்து வந்த வெளிமாநில தொழிலாளா்கள் 11 போ் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பேரிடா் மீட்புக் குழுவினா் அவா்களை மீட்டனா். இவா்கள் நதி அருகே தற்காலிக கூடாரம் அமைத்து கட்டுமான வேலைக்குச் சென்று வந்தனா். தொடா் மழை காரணமாக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் தொழிலாளா்கள் அதில் சிக்கிக் கொண்டனா். பொக்லைன் இயந்திரத்துடன் நதியில் அடுத்துச் செல்லப்பட்ட ஓட்டுநா் மீட்கப்பட்டாா். பொக்லைன் இயந்திரம் நீரில் மூழ்கிவிட்டது.
ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வியாழக்கிழமை காலை முதல் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், இரு பகுதிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மலைப் பகுதியில் இருந்து வெள்ளத்தில் பாறைகள் அடித்து வரப்படுவதால் முன்னெச்சரிக்கையாக பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.