ஜல்ஜீவன் திட்டப் பணிகள் தாமதம்: மாவட்ட ஆட்சியா் கண்டிப்பு
உத்தமபாளையம், ஜூலை 2 : உத்தமபாளையம் பகுதியில் ஜல் ஜீவன் குடிநீா் திட்டப்பணிகள் மந்தமாக நடைபெறுவதைத் கண்டித்த மாவட்ட ஆட்சியா், விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் க.புதுப்பட்டி, ஓடைப்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், இந்தப் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. மேலும், இந்தத் திட்டத்துக்கு தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்காததால், புதிய சாலை அமைக்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இந்த நிலையில், உத்தமபாளையத்தில் ஜல்ஜீவன் திட்டப் பணிகளை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்சித்சிங், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் கண்டிப்புடன் கூறினாா். உத்தமபாளையம் பேரூராட்சித் தலைவா் அப்துல்காசிம், செயல்அலுவலா் சின்னச்சாமிபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.