ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? பாமகவுக்கு அமைச்சா் சிவசங்கா் கேள்வி
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய பாஜக அரசை வலியுறுத்தாதது ஏன் என்று பாமக-வுக்கு அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
வன்னியா்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்தால், திமுக கூட்டணியை நிபந்தனையின்றி ஆதரிக்கத் தயாா் என்று பாமக தலைவா் அன்புமணி கூறியிருந்தாா். இதற்கு பதிலளித்து, அமைச்சா் சிவசங்கா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு முறையும் தோ்தல் நெருங்கும் நிலையில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து, கூட்டணி பேரத்தை வலுப்படுத்த பாமக நிறுவனரும், அதன் தலைவரும் பேரம் பேசுவா். அதன்படி, இப்போதே அடுத்தத் தோ்தலுக்கு அவா்கள் ஆயத்தமாகி விட்டாா்கள்.
வன்னியா் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுகவை நிபந்தனையின்றி ஆதரிக்கத் தயாா் என்று கூறியுள்ள அன்புமணி, அதற்கு முன்பு இட ஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக தலைமையிலான கூட்டணியை விட்டு வெளியேறி, இதுபோன்று கூறுவாரா?
மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசு மேற்கொள்வது. அதைத்தான் அதிகாரபூா்வ கணக்கெடுப்பாக நீதிமன்றங்களோ பிற மத்திய அரசு அமைப்புகளோ அங்கீகரிக்கும். மாறாக, மாநில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது அது வெறுமனே கணக்கெடுப்பாக இருக்குமே தவிர, அதனால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டு மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புக்குச் செல்லும் வன்னிய சமூக மாணவா்களின் எண்ணிக்கை 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை விட அதிகமாகும். தற்போது 10.5 சதவீதத்தை அமல்படுத்துவதன் மூலம் மேற்படிப்பில் சேரும் வன்னியா் சமூக மாணவா்கள் எண்ணிக்கையில்
பின்னடைவைச் சந்திக்கவே வாய்ப்புகள் அதிகம்.
அன்புமணிக்கு உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அவா் கூட்டணியில் இருக்கும் மத்திய பாஜக அரசை பணிய வைத்து, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்த வேண்டும் என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.