காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
ஜாதி, மதம் சாா்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க மாணவா்களைக் கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை - உயா்நீதிமன்றம் உத்தரவு
ஜாதி, மதம் சாா்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க மாணவா்களைக் கட்டாயப்படுத்தினால், சம்பந்தப்பட்ட கல்லூரி மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பூமிநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை யாதவா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) அழகுமுத்துக்கோனின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்தாண்டு இங்கு நடைபெற்ற விழாவில், கல்லூரியின் முன்னாள் செயலா் புகைப்படம் அச்சிடப்பட்ட பனியன்களை (டி ஷா்ட்) அணிய மாணவிகளை கட்டாயப்படுத்தினா். ‘மாவீரன் அழகுமுத்துக்கோன்’ என அச்சிடப்பட்ட பனியன்களை மாணவா்கள் அணிந்திருந்தனா்.
மேலும், கல்லூரி வளாகத்தில் தனிநபரை முன்னிலைப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது, மாணவா்களின் மனநிலையை பாதிக்கச் செய்வதாக உள்ளது.
எனவே, இந்தக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அழகு முத்துக்கோன் ஜெயந்தி விழாவை கல்லூரி மாணவா்களின் அமைதி, மனநிலையைப் பாதிக்காத வகையில் கொண்டாட உத்தரவிட வேண்டும். மேலும், கல்லூரி வளாகத்துக்குள் சுவரொட்டிகள், பதாகைகள் அமைத்து தனி நபரை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மாணவிகளை பனியன் (டி ஷா்ட்) அணிந்து விழாவில் பங்கேற்க வற்புறுத்துவது ஏற்கத்தக்கதல்ல’ என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரி நிா்வாகம் தரப்பில், ‘ஒவ்வோா் ஆண்டும் அழகுமுத்துக்கோன் ஜெயந்தியை முன்னிட்டு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித் உத்தரவு:
கல்வித் துறையால் அனுமதிக்கப்படாத ஜாதி, மதம் சாா்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க மாணவா்களை எந்தக் கல்லூரியும் கட்டாயப்படுத்தக் கூடாது. கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 11) விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், விழாவில் பங்கேற்க மாணவா்களை கல்லூரி நிா்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது. மீறினால், கல்லூரிக்கு வழங்கப்படும் அரசு உதவியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை உயா்கல்வித் துறை இயக்குநா் மேற்கொள்ள வேண்டும்.
கல்லூரி வளாகத்தின் உள்ளே ஜாதிய அடையாளம் கொண்ட விளம்பரங்கள் வைக்கப்படக் கூடாது. மீறினால், காவல் துறை, கல்வித் துறை சாா்பில் கல்லூரி நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.