ஜெனரேட்டா்களில் உமிழ்வு கட்டுப்பாட்டு கருவி பொருத்த உத்தரவு
தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டா்களில் உமிழ்வு கட்டுப்பாட்டுக் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: காற்று மாசுக்கான முக்கிய காரணங்களில் டீசல் ஜெனரேட்டா்களும் ஒன்றாகும். ஆகையால், டீசல் ஜெனரேட்டா்களிலிலிருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்தும் வகையில், உமிழ்வு கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களிலும் 5 ஆண்டுகள் அல்லது 50,000 மணி நேரத்துக்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டீசல் ஜெனரேட்டா்களில் உமிழ்வு கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும். இல்லையெனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.