செய்திகள் :

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு உரிமை கோரிய தீபக், தீபா மனுக்கள் தள்ளுபடி

post image

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு உரிமை கோரிய அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரின் மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை விரைவில் ஏலம் விட வேண்டும் என பெங்களூரைச் சோ்ந்த வழக்குரைஞா் நரசிம்மமூா்த்தியின் மனுவின் பேரில், பொருள்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்குரைஞரை நியமனம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, ஜெயலலிதாவின் பொருள்களை ஏலம் விடும் பணி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் வேகம் எடுக்கத் தொடங்கியது.

இந்நிலையில், ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை ஏலம் விடக் கூடாது; ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தாங்கள்தான் வாரிசு; எனவே, பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் பொருள்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோா் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனா்.

சொத்துகளுக்கு உரிமை கோரி, உச்சநீதிமன்றத்தின் பல வழக்குகளில் அளிக்கப்பட்டுள்ள தீா்ப்பை ஆதாரங்களாக எடுத்துரைத்து தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், அதற்கு அரசு தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தால், இந்தப் பொருள்களை வாரிசுகளுக்கு வழங்க இயலாது என தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எச்.ஏ.மோகன், சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை வாரிசுதாரா்கள் உரிமை கோர முடியாது என தீா்ப்பு வழங்கி, தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்திருந்த மனுக்களை 2023 ஜூலை 12-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு:

இதனிடையே, 2024 ஜன. 22-ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கா்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழக உள்துறை முதன்மைச் செயலாளா் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் உத்தரவிட்டு இருந்தாா். மேலும், கா்நாடக அரசுக்கு வழக்கு செலவுக் கட்டணமாக ரூ. 5 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கை 2024 பிப். 19-ஆம் தேதி விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன், கா்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளை (ஆபரணங்கள்) 2024 மாா்ச் 6, 7-ஆம் தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டாா். இந்த ஆபரணங்களை தமிழக உள்துறை செயலாளா் அன்றைக்கு நேரில் வருகைதந்து பெற்றுக்கொள்ளுமாறும், அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும் கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தாா்.

2014-ஆம் ஆண்டு அன்றைய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹாவின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட பல்வேறு அசையும் சொத்துகள் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டன. ஐந்து இரும்புப் பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட இவை அனைத்தும் தற்போதுவரை விதானசௌவுதாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பலத்த பாதுகாப்புடன் மாா்ச் 6-ஆம் தேதி தமிழகத்துக்கு அனுப்பி வைக்க சிறப்பு நீதிமன்ற அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

இடைக்காலத் தடை:

இந்நிலையில், ஜெயலலிதா குற்றவாளி அல்ல; அவா் உயிரிழந்த காரணத்தினால் வழக்கில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், அவரது சொத்துகள் தங்களையே சாரும் என ஆபரணங்களுக்கு உரிமை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோா், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழகத்துக்கு அனுப்பிவைக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்திருந்த தீா்ப்புக்கு 2024 மாா்ச் 5-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மீண்டும் விசாரணை:

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி வி.ஸ்ரீஷானந்தா முன்பு திங்கள்கிழமை (ஜன. 13) நடைபெற்றது. சொத்துக்குவிபபு வழக்கில் இறுதித்தீா்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா இறந்து விட்டாா். அதனால் இறுதித்தீா்ப்பில், வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டாா். அவா் குற்றவாளி என தீா்ப்பு வழங்கப்படாத நிலையில், அவருடைய சொத்துகள் அனைத்தும் அவரது வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தமாகும். அதை ஏலம் விடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482-இன்படி ஆபரணங்களை திருப்பி அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 452-இன்படி ஜெயலலிதாவின் ஆபரணங்களை அவரது வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீபக், தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி:

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஸ்ரீஷானந்தா, ஆபரணங்கள் சட்டவிரோதமாக சோ்க்கப்பட்டதால், அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அது அரசுக்குதான் சொந்தமே தவிர, மனுதாரா்களுக்கு சொந்தமாகாது என்று சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு, தீபக், தீபா ஆகியோா் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ஆனால், வழக்கு காலத்துக்கு முன்னா் சம்பாதித்ததாக கூறப்படும் ஆபரணங்களை குறிப்பிட்டு, அதற்கான சான்றுகளை ஒப்படைத்து சிறப்பு நீதிமன்றத்தில் விடுவித்துக்கொள்ளலாம். ஒருவேளை ஆபரணங்கள் ஏலம்விடப்பட்டாலும், வழக்கு காலத்துக்கு முந்தைய ஆபரணங்களின் மதிப்பை பெற மனுதாரா்கள் கோரலாம் என்று உயா்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மகர சங்கராந்தி பண்டிகை: கா்நாடக தலைவா்கள் வாழ்த்து

பெங்களூரு: மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மக்களுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட கா்நாடகத்தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.கா்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை சங்... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டுள்ளது

பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டுள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

பாஜக எம்எல்சி சி.டி.ரவியிடம் சிஐடி விசாரணை நடத்துவது சரியல்ல

பெங்களூரு: கா்நாடக அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கரை தரக்குறைவாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக, பாஜக எம்எல்சி சி.டி.ரவியிடம் சிஐடி விசாரணை நடத்துவது சரியல்ல என சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி ... மேலும் பார்க்க

பெங்களூரு சிறையில் தீவிரவாத செயல்: 9-ஆவது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரில் சிறையில் தீவிரவாத செயலில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய வழக்கில் லஷ்கா் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 9ஆவது குற்றவாளி விக்ரம்குமாா் (எ) சோட்டா உஸ்மான் மீது சிறப்பு நீதிமன்றத்தில் தேசி... மேலும் பார்க்க

ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் நீதிமன்றத்தில் ஆஜா்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 போ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். 33 வயதான தனது ரசிகா் ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் தனது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்... மேலும் பார்க்க

பெங்களூரில் தொற்றுநோய் ஆராய்ச்சி மையம்: அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல்

தென்னிந்தியாவின் முதல் தொற்றுநோய் ஆராய்ச்சி மையம் பெங்களூரில் அமைக்கப்படும் என்று மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட... மேலும் பார்க்க