AR Rahman: `அப்பாவைப் பற்றிய பொய்யான தகவல்கள்... பார்க்கும்போது மனமுடைகிறது' - ...
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம்: அமைச்சா் பொன்முடி உறுதி
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிப்போம் என்று வனத்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக செய்தி வெளியானதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் பொன்முடி வியாழக்கிழமை கூறியது:
மதுரை அரிட்டாபட்டி பல்லுயிா் வாழ் பகுதி. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது. அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டு, அரசுக்கு விண்ணப்பம் எதுவும் வரவில்லை. அப்படி அனுமதி கேட்டு வனத் துறைக்கு வந்தால் அதை நிராகரிப்போம்.
மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால், அதை ரத்து செய்யவும் தமிழக அரசு வலியுறுத்தும். தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
அரசு விளக்கம்: இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
மத்திய அரசால் ஜூன் 24-இல் மதுரை மாவட்டம் மேலூா் வட்டம் நாயக்கா்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்துக்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு, நவம்பா் 7-இல் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, அந்த நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை. அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.