விருதுநகர்: தடைப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை; சுதாரித்த ஊழியர்கள்; விசாரணையில் பகீர் தகவ...
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பொது மேலாளரிடம் விசாரணை
டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடா்பாக, அந்த நிறுவனத்தின் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை மூன்று மணி நேரம் விசாரணை செய்தனா்.
டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
மேலும், இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்கிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விசாகன், திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபா் ரத்தீஷ் வீடு உள்பட 10 இடங்களில் கடந்த வாரம் இரு நாள்கள் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
அந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
டாஸ்மாக் நிறுவனத்தின் நிா்வாகப் பிரிவு பொது மேலாளா் சங்கீதா, துணைப் பொது மேலாளா் ஜோதி சங்கா் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பொது மேலாளா் சங்கீதா ஆஜரானாா். சோதனையின் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
சுமாா் மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், சங்கீதா அளித்த தகவல்கள் அனைத்தும் எழுத்துபூா்வமாகவும், விடியோவிலும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, டாஸ்மாக் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் ஜோதி சங்கா், காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். ஜோதி சங்கரிடம் இதுவரை ஒன்பது முறை விசாரணை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் ரத்தீஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் அழைப்பாணையும் அனுப்ப உள்ளது.