டிஜிட்டல் கைது: நாயை வைத்து பாடம்புகட்டிய மும்பைவாசி... வெறுத்துப்போன மோசடி கும்பல்
சமீபகாலமாக மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த முறைகேட்டில் ஏராளமானோர் தங்களது வாழ்நாள் சேமிப்பு பணத்தை இழந்துள்ளனர்.
மும்பைவாசி ஒருவருக்கு அது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் இந்த மோசடியில் இருந்து தப்பித்துக்கொண்டார். மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் ஜஸ்டீன் என்பவருக்கு மர்ம நபர் ஒருவர் வீடியோ கால் செய்து தான் அந்தேரி போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். போனில் பேசும் நபர் மோசடி பேர்வழி என்பதை தெரிந்து கொண்ட ஜஸ்டீன் வீடியோ காலில் தனது முகத்தை காட்டுவதற்கு பதில் தனது வீட்டில் செல்லமாக வளர்ந்து வரும் நாய்க்குட்டியை எடுத்து அதன் முகத்தை வீடியோ காலில் காட்டினார்.
உடனே வீடியோ காலில் பேசிய நபர் நபர் அதிர்ச்சியாகிவிட்டார். ஆனாலும் நான் அந்தேரி போலீஸ் நிலையத்தில் இருந்து அதிகாரி பேசுகிறேன். என்னை பாருங்கள் என்று வீடியோ காலில் பேசிய நபர் தெரிவித்தார். உடனே ஜஸ்டீன் தனது வளர்ப்பு நாயை கேமரா முன்பு காட்டி நான் உங்கள் முன்புதான் இருக்கிறேன் என்று தெரிவித்தார். அதோடு ஜஸ்டீன் தொடர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார். இதனால் வீடியோ காலில் பேசிய நபர் வெறுப்படைந்தார். அவரால் மேற்கொண்டு தொடர்பில் இருக்க முடியவில்லை. வீடியோகாலை கட் செய்துவிட்டார். வீடியோ காலில் வந்த நபர் மும்பை போலீஸ் அதிகாரி போன்று உடையணிந்திருந்தார்.
இந்த சம்பவத்தை ஜஸ்டீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோ காலில் காட்டிய நாய் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அப்பதிவு வைரலாகி இருக்கிறது. போலீஸ் அதிகாரி, அமலாக்கப்பிரிவு அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரி என்று கூறித்தான் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்கின்றனர். கடந்த வாரம் பெங்களூருவில் தங்கி இருந்த ஜப்பான் பிரஜை ஒருவரை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.35 லட்சத்தை அபகரித்துவிட்டனர். அதற்கு முன்பு பெங்களூரை சேர்ந்த ஒருவரை டிஜிட்டல் முறையில் கைது செய்து 11 கோடியை மோசடி செய்தனர்.