ஆர்சிபி கூட்டநெரிசல்: பெங்களூர் கூடுதல் ஆணையரின் பணியிடை நீக்கம் ரத்து!
டிரெக்கிங் முதல் பாரா கிளைடிங் வரை, சாகச ஆசையில் சரியும் உயிர்கள்! - நமக்குள்ளே...
ஆண்டு முழுக்க அலுவல், தொழில், வீடு என்று ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு, சில இளைப்பாறல்கள் அவசியம் தேவை. அந்த வகையில்தான், பல பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், எல்லை மீறும்போது அவையே உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுவது துயரம். சமீபத்தில் அப்படி நடந்த சில சம்பவங்கள், அதுகுறித்த உரையாடலின் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தோனேசியாவில் சாகசப் பயணமாக எரிமலைக்குச் சென்ற 26 வயதுப் பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பிரேசில் நாட்டில், சாகச விளையாட்டு ராட்சத பலூன் தீப்பிடித்து கீழே விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய சூழலில், மலேசிய நாட்டின் ‘ரியாலிட்டி ஸ்டார்’ ரெதா ரோஸ்லான், 2018-ம் ஆண்டு தன் இரண்டு வயதுக் குழந்தையுடன் 200 அடி உயரத்தில் இருந்து பஞ்சி ஜம்ப் செய்து பதைபதைக்க வைத்த வீடியோ, மீண்டும் வைரல் ஆக்கப்பட்டுள்ளது. கூடவே, பெற்றோர்கள் தங்களது சாகச, ரீல்ஸ் மோகங்களுக்காகக் குழந்தைகளையும் வன்முறைக்கு உட்படுத்தும் இத்தகைய கொடூரப் போக்குக்கு கண்டனங்களும் பகிரப்படுகின்றன.

முன்பெல்லாம் பொழுதுபோக்கு - சாகசம் இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து முறையான பயிற்சியுடன் சாகசங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், `எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும்’ என்கிற மனநிலையில் இருக்கும் இன்றைய உலகோ, சாகசத்தையும் பொழுதுபோக்காக அனுபவித்துவிடத் துடிக்கிறது. ஆனால், இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்குமே, சாகசத்துக்கான இடங்கள், சாதனங்கள் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு பஞ்சமில்லாமல்தான் உள்ளன. தெருவில் இழுத்துவரப்படும் ராட்டினங்கள் தொடங்கி, பெரும் பெரும் பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள சாகச சாதனங்கள் வரை இதுதான் எதார்த்தம். இதனால், சாகசங்களும் ஆபத்துகளும் இரட்டைப் பிறவிகளாகவே இருப்பது, அவ்வப்போது நடக்கும் விபத்துகள் மூலமாக வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
2018 - 2022-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் சாகச விளையாட்டுகளால் ஏற்பட்ட மரணங்கள் குறித்த தரவு அடிப்படையிலான ஆய்வு, மலையேற்றத்தில் 61% உயிரிழப்புகள், பாரா கிளைடிங்கில் 58% உயிரிழப்புகள், படகுச் சவாரியில் 17% உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
ஒரு சாதாரண இடத்தையும் மரணக்குழி ஆக்கக்கூடியது, மக்களின் எல்லை மீறல் மனோபாவமே. ஊரிலிருக்கும் குளம் முதல் கடல் வரை அறியாத ஆழமுள்ள, அனுமதியில்லாத பகுதி என்றாலும் அதில் இறங்கும் வறட்டு தைரியம்; கார், பைக் என விர்ர்ர்ரென்ற வேகம் தரும் த்ரில்லுக்காக உயிரை பணயம் வைக்கும் முட்டாள்தனம்; மாஸ்க் முதல் லைஃப் ஜாக்கெட் வரை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றா அசட்டைத்தனம்... இவையும் ஆபத்துக் காரணிகளே.
எல்லைக்குள் இருப்பதே எப்போதும் பாதுகாப்பு தோழிகளே. உணர்வோம், குழந்தைகளை ஐந்திலிருந்தே அறிவுறுத்தி வளர்ப்போம். வளர்ந்த குழந்தைகளுக்கு, அனுபவப் பாடங்கள் வாயிலாக வற்புறுத்துவோம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்