தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
டீப்சீக் செயலிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு: சீனா எதிா்ப்பு
பெய்ஜிங் : சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக்-கை அரசு அதிகாரிகள் பயன்படுத்த மத்திய அரசு கட்டுப்பாடு விதித்ததற்கு சீனா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் உருவாக்கப்பட்ட மலிவு விலை செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக், அமெரிக்காவின் சாட்ஜிபிடியை உலக அளவில் பதிவிறக்கத்தில் விஞ்சியது.
எனினும், டீப்சீக்கில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானதாக இல்லை என அமெரிக்கா, தென் கொரியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அதன் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் அதிக அளவில் பதிவிறக்கம் நடைபெற்ற டீப்சீக் செயலி, சாட்ஜிபிடி போன்றவற்றை மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் அலுவக கணினிகளில் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது.
அரசு தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் க்வா ஜியாகுன் கூறுகையில், ‘சட்டத்து எதிராக தகவல்களைச் சேகரித்து வைக்குமாறு எந்த ஒரு நிறுவனத்தையோ, தனி நபரையோ சீன அரசு கேட்டுக் கொண்டதில்லை. இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது வா்த்தகத்தை அரசியலாக்கும் செயலாகும். இந்த விவகாரத்தில் சீன நிறுவனங்களின் சட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும்’ என்றாா்.