Death Clock: உங்கள் மரணத்தைக் கணிக்கும் AI செயலி... ஆர்வம் காட்டும் மக்கள்!
டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி - காங்கிரஸ் பிரேக்-அப்... `இந்தியா' கூட்டணி உடைந்ததால் லாபம் யாருக்கு?!
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது டெல்லி. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க என மூன்று தேசியக் கட்சிகளும் அங்கு ஆட்சியைப் பிடிக்கத் தீயென வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்தத் தேர்தலில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி உடைந்தது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது!
தனித்துப் போட்டி!
2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை வீழ்த்த கருத்து வேறுபாடுகளை மறந்து எதிரெதிர் துருவங்களாக இருந்த ஆம் ஆத்மியும், காங்கிரஸும் கைகோத்தன. தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம் டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேவேந்தர் யாதவ், ``இந்தத் தேர்தலில், 70 தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். தேர்தல் முடிந்த பிறகு `முதல்வர் யார்?' என்பது தொடர்பாகக் கட்சி முடிவு செய்யும்'' என்று தெரிவித்தார். டிசம்பர் 1-ம் தேதி அன்று, ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், `கூட்டணி இல்லை' என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சராக இருந்த அதிஷியை முதல்வராக்கினார் கெஜ்ரிவால். அப்போதிலிருந்தே டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணப்பட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். `இந்தப் பிரசாரங்களை ஆரம்பித்தபோதே, சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துவிட்டார் கெஜ்ரிவால்' என்கின்றனர் ஆம் ஆத்மியின் நிர்வாகிகள்.
முன்னதாக, ``டெல்லி சட்டமன்றத் தேர்தல் ஒரு தர்மயுத்தம். கௌரவர்கள் போல, பண பலமும், அதிகார பலமும் கொண்டிருக்கிறது பா.ஜ.க. மக்களும், கடவுளும் பாண்டவர்களான எங்கள் பக்கம் நிற்கின்றனர். வெற்றி நமதே!'' எனப் பிரசாரக் களத்தில் முழங்கியிருக்கிறார் கெஜ்ரிவால். இதுநாள் வரை பா.ஜ.க-வை குறிவைத்தே பிரசாரங்களைச் செய்துவந்த கெஜ்ரிவால், இனி காங்கிரஸையும் தாக்கிப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே டெல்லி காங்கிரஸ் கமிட்டி, கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், பஞ்சாப்பில் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மியும், காங்கிரஸும், டெல்லியில் கூட்டணியமைத்தன. மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில், நான்கில் ஆம் ஆத்மியும், மூன்றில் காங்கிரஸும் போட்டியிட்டன. ஆனால், ஏழு தொகுதிகளிலும் பா.ஜ.க-வே வெற்றிபெற்றது. அதையடுத்து நடந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் கைகூடாததால் தனித்துப் போட்டியிட்டது ஆம் ஆத்மி. அதன் பிறகு, இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது, இரண்டு கட்சிகளுமே டெல்லியில் தனித்துப் போட்டியிட முடிவெடுத்திருக்கின்றன.
இந்த முடிவைக் கிண்டல் செய்யும் விதமாக, ``நாடாளுமன்றத் தேர்தலின்போது, `நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்' என்றனர். இப்போது, `நீங்கள் யார்?' எனக் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் மாறி மாறிக் கேட்டுக்கொள்கின்றன. `இந்தியா' கூட்டணிக்கு எந்தவித தொலைநோக்குப் பார்வையும் இல்லை. வெறும் அதிகார வெறி மட்டுமே இருக்கிறது'' என்றிருக்கிறார் பா.ஜ.க-வின் தேசியச் செய்தித் தொடர்பாளர் சேஷாத் பூனாவாலா. இந்தத் தேர்தலைச் சந்திக்க 43 குழுக்களை அமைத்து வேலையைத் தொடங்கியிருக்கும் டெல்லி பா.ஜ.க, ``கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் அடிக்கும் கூத்துக்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி விவகாரத்திலேயே தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த இரு கட்சிகளுக்கும் மக்கள் நிச்சயம் வாக்களிக்கமாட்டார்கள்'' என்கிறது.
டெல்லி அரசியல் பார்வையாளர்களோ, ``எதிரெதிர் கொள்கைகள் கொண்ட காங்கிரஸும், ஆம் ஆத்மியும் டெல்லியில், மக்களவைத் தேர்தலை ஓரணியில் சந்தித்ததே அவர்களுக்குப் பின்னடைவாக அமைந்தது. இதனால் சிதறிய வாக்குகள் பா.ஜ.க-வுக்குப் ப்ளஸாக அமைந்தது. அதனால், இந்தக் கூட்டணி முறிவு காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கிவிடாது. குறிப்பாக, ஆம் ஆத்மிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தாது.
தனக்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்கத் தயங்கமாட்டார் கெஜ்ரிவால். ஆனால், ஆட்சி மீதான அதிருப்தியைச் சமாளித்து, அவர் மீண்டும் முதல்வராவது மிகவும் கடினமான விஷயம். தற்போதைய நிலவரப்படி, களம் ஆம் ஆத்மிக்குச் சாதகமாக இல்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில், கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளும், பிரசாரங்களுமே `டெல்லியை ஆளப்போவது யார்?' என்பதைத் தீர்மானிக்கும்'' என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.