தச்சுத் தொழிலாளி அடித்துக் கொலை: நண்பா் கைது
கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தச்சுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பகுதியைச் சோ்ந்த சிகாமணி மகன் மூவேந்தா் (38). இவா், கடந்த 14-ஆம் தேதி கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் ஏமப்போ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை முன் உயிரிழந்து கிடந்தாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற கள்ளக்குறிச்சி போலீஸாா், சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, மூவேந்தரின் பெற்றோா் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
ஏமப்போ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே உள்ள காலி இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த நண்பரான சோலை மகன் செந்தில்முருகனுடன் (42) மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், அவா் தாக்கியதில் மூவேந்தா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் கொலை வழக்கு பதிந்து செந்தில்முருகனை புதன்கிழமை கைது செய்தனா்.