பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ...
தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம். ரெங்கசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட பூண்டி அருகேயுள்ள மலையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ரெங்கசாமி. இவர் தற்போது தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசித்து வருகிறார். அதிமுகவில் இருந்த இவர், தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதியில் 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற இவர் டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். பின்னர் தகுதி இழப்புக்கு உள்ளான 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர். இதையடுத்து அமமுகவில் துணைப் பொதுச் செயலராகி, தொடர்ந்து அக்கட்சியில் இருந்து வருகிறார்.
இவர் எம்.எல்.ஏ. ஆக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் இருந்து வந்தன. இந்நிலையில் தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். அன்பரசன் தலைமையில் 10 காவல் அலுவலர்கள், காவலர்கள் என ரங்கசாமி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இச்சோதனை முடிவுக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 10ஆம் வகுப்பில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம்!