Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
தஞ்சாவூர்: “வயித்தெரிச்சல்ல இருக்கோம்; யார் பொய் சொல்றா?”- உதயநிதி குறிப்பிட்ட பெண் விவசாயி குமுறல்
நெல் கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தால் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் தொடர் மழையில் நனைந்ததில் முளைத்து சேதமடைந்ததாக டெல்டா விவசாயிகள் கூறி வந்தனர்.
இதையடுத்து கடந்த 22ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டதைப் பார்வையிட்டு குறைகளைக் கேட்டபோது, வரவுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பூங்கொடி என்பவர் எடப்பாடி பழனிசாமியிடம் முளைத்த பயிரைக் காட்டி தன் நிலையைக் குமுறலுடன் கூறினார்.

இந்நிலையில் தஞ்சாவூரில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ரயில் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்து விட்டதாகவும், நெல் கொள்முதல் நடக்கவில்லை எனவும் பல பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.
வரவுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், 5 ஏக்கரில் குத்தகை நிலத்தில் நடவு செய்துள்ளார். அவரது வயலில் நேற்று மதியம் வரை அறுவடை நடக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவர் கொண்டு வந்த நெல் மழையில் நனைந்து விட்டதாகப் பொய்யான தகவலைச் சொல்லியிருக்கிறார்.
அறுவடையே நடைபெறாத வயலிலிருந்து அந்தப் பெண் எப்படி நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலையத்திக்குக் கொண்டு வந்தார்?" எனப் பேசியிருந்தார்.

இது குறித்து பெண் விவசாயி பூங்கொடியிடம் பேசினோம், "5 ஏக்கர் குத்தகை நிலத்தில் கடன, உடன வாங்கி நான் குறுவை சாகுபடி செஞ்சேன். தீபாவளிக்கு பத்து நாள் முன்பே எங்க நெற்பயிர் அறுவடைக்கு வந்திருச்சி.
சென்டர்ல நெல் கொள்முதல் செய்யாததால் நெல் தேங்கி கிடந்தது. நெல் போட முடியாத நிலை இருந்ததால் அந்தச் சமயத்தில் அறுவடை செய்ய வேண்டாம் எனச் சொல்லி விட்டனர். அதனால் நானும் அறுவடை செய்யவில்லை. இதைத்தொடர்ந்து பெய்த மழையில் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கி பயிர் பாதிப்படைந்தது.
எடப்பாடி பழனிசாமி அய்யா வந்தபோது, வயலிலேயே முளைத்த நெற்பயிரை எடுத்து வந்து, 'கொள்முதல் தாமதமானதால் நான் அறுவடை செய்யாமல் இருந்தேன். இப்போது மழையில் நெற்பயிர் முளைத்து பாதிச்சிருக்கு'னு என் நிலையைச் சொன்னேன். ஆனால் நான், சென்டருக்குக் கொண்டு வந்த நெல் முளைத்து விட்டது எனக் கூறியதாகச் சொல்கிறார்கள். நான் அப்படிச் சொல்லவில்லை.
நாலு மாசமா படாத பாடு பட்டு பிள்ளை போல் பாதுகாத்த நெல்லை அறுவடை செஞ்சி போட முடியாமல் தவிச்சு நிக்குறோம். எங்க பொழப்பு சிரிப்பா சிரிக்குது. நாங்க பாதிக்கப்பட்டாலும் குத்தகை நிலத்துக்கு நெல் மூட்டை தரணும். இப்படி பல வலிகளில் இருக்கும் நான் இதில் ஏன் பொய் சொல்லணும்.
வயித்தெரிச்சலில் இருக்கிறோம். யார் பொய் சொல்கிறார்கள். எங்க வயலில் பாதிப்பை ஆய்வு செய்து அரசு நிவாரணம் கொடுத்தால் பாதிப்பிலிருந்து நானும், என் குடும்பமும் மீள்வோம்" என்றார்.
















