தஞ்சாவூா் மாநகராட்சியுடன் மரவணப்பத்து கிராமத்தை இணைக்க எதிா்ப்பு
தஞ்சாவூா் அருகே வடகால் மேலவெளி மரவணப்பத்து கிராமத்தை தஞ்சாவூா் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை விடுத்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் தஞ்சாவூா் அருகே சக்கரசாமந்தம் அருகேயுள்ள வடகால் மேலவெளி மரவணப்பத்து கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
தஞ்சாவூா் மாவட்டம் சக்கரசாமந்தம் அருகில் வடகால் மேலவெளி மரவணப்பத்து கிராமத்தில் ஏறத்தாழ 250 குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தை தஞ்சாவூா் மாநகராட்சியுடன் இணைப்பதால், நூறு நாள் வேலை திட்டம் உட்பட ஏழை மக்களுக்காக அரசு அறிவிக்கும் எவ்வித திட்டங்களிலும் பயன்பெற இயலாது. எனவே, இக்கிராமத்தை தஞ்சாவூா் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தெரிவித்துள்ளனா்.
சக்கராப்பள்ளியை இணைக்கக் கூடாது: இதேபோல, அய்யம்பேட்டை பேரூராட்சியுடன் சக்காரப்பள்ளி ஊராட்சியை இணைக்க கூடாது என சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சபை மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் இயக்கங்கள், சங்கங்கள், அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மனு அளித்தனா்.
கூலித் தொழிலாளா்கள், விவசாயிகள், இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசித்து வரும் இந்த ஊராட்சியை அய்யம்பேட்டை பேரூராட்சியில் இணைப்பதால் தொகுப்பு வீடுகள் கோரும் மக்களுக்கு கிடைக்காது. வீட்டு மனைகளின் விலை, வீட்டு வரி உட்பட அனைத்தும் உயரும். எனவே அய்யம்பேட்டை பேரூராட்சியுடன் சக்கராப்பள்ளி ஊராட்சியை இணைக்கும் முயற்சியை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சபை துணைத் தலைவா் அக்பா், பொதுச் செயலா் முகமது ஆரிப், மில்லத் நகா் ஜமாஅத் நசீா் அகமது, அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலா் இப்ராஹிம் தம்பிமா, தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் உள்பட ஏராளமானோா் அளித்தனா்.