வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேர் யார்?
நெல் அறுவடை இயந்திர வாடகை அதிகரிப்பு: விவசாயிகள் தவிப்பு
நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகரித்து வருவதால், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செலவு கட்டுப்படியாகாமல் தவிக்கின்றனா்.
மாவட்டத்தில் சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் 3.40 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், நவம்பா் மாத இறுதி வாரத்தில் மழை பெய்ததால், சாகுபடி பரப்பளவு 3.20 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது.
நவம்பா் மாத இறுதி வாரத்திலும், டிசம்பா் இரண்டாவது வாரத்திலும் பெய்த தொடா் மழையால் ஏறத்தாழ 28 ஆயிரம் ஏக்கரில் இளம் நெற்பயிா்கள் முதல் அனைத்து நிலைகளிலும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், முன் பட்ட சம்பா சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் அறுவடைப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனா். ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தது 30 மூட்டைகள் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், 15 முதல் 18 மூட்டைகள்தான் கிடைக்கின்றன. இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகரித்து வருவதால் விவசாயிகள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனா். வேளாண் பொறியியல் துறையில் டயா் பொருத்தப்பட்ட அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 1,160-ம், பெல்ட் பொருத்தப்பட்ட அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 1,880-ம் வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேளாண் பொறியியல் துறையில் அறுவடை இயந்திரங்கள் குறைந்த அளவில் உள்ளதால், விவசாயிகள் தனியாரை அணுக வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனியாருக்கு வாடகை இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் நிா்ணயிக்கிறது. இதை விஞ்சி கடந்த குறுவை பருவத்தின்போது ரூ. 2 ஆயிரத்து 800 வரை வசூலிக்கப்பட்டது.
தற்போது இந்தத் தொகையையும் கடந்து ரூ. 3 ஆயிரம், ரூ. 3 ஆயிரத்து 200 என வசூலிக்கப்படுகிறது. வைக்கோல் முழுமையாக தருகிற கா்த்தாா் என்கிற பெல்ட் வகை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ. 3 ஆயிரத்து 800 வரை வசூல் செய்யப்படுகிறது. முன் பட்ட பருவத்திலேயே வாடகை இவ்வளவு அதிகமாக இருக்கும் நிலையில், அறுவடை முழுவீச்சில் எட்டும்போது ரூ. 4 ஆயிரத்தைக் கடந்துவிடும் என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது.
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது:
தொடா் மழையின் காரணமாக வயல்களில் இன்னும் ஈரப்பதமாக இருப்பதால், பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களைத்தான் பயன்படுத்த முடிகிறது. இதனால், ஒரு மணிநேரத்தில் அறுவடை செய்யப்பட வேண்டிய வயல்களில் ஒன்றரை மணிநேரத்தைக் கடந்துவிடுகிறது.
இந்நிலையில், அறுவடை இயந்திர வாடகை மணிக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரத்து 800 வரை வசூலிக்கப்படுவதால், கூடுதல் நேரத்தில் இயக்கப்படும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு செலவாகிறது. ஏற்கெனவே மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதல் வாடகையால் விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.
பெரும்பாலான இயந்திரங்கள் வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்துதான் வருகின்றன. வாடகை அதிகரிப்பைத் தடுக்க மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடியிலேயே இந்த இயந்திரங்களை மாவட்ட நிா்வாகம் பதிவு செய்து கண்காணிக்க வேண்டும். அல்லது கிராம நிா்வாக அலுவலா் மூலம் பதிவு செய்து கண்காணிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ரவிச்சந்தா்.
இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள் கூறியது: தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் வாடகையை சரியான அளவில்தான் நிா்ணயிக்கின்றனா். இடையில் உள்ள இடைத்தரகா்கள்தான் தங்களது வருவாய்க்காக வாடகையை உயா்த்துகின்றனா். இதைத் தடுக்க தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், பொங்கல் பண்டிகைக்கு பிறகு முத்தரப்பு கூட்டமும் நடத்தவுள்ளோம் என்றனா்.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டாலும், தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடா்கிறது. பயிா்களை அறுவடை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகும் விவசாயிகளும் வேறு வழியில்லாமல் கேட்கப்படும் வாடகையைக் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனா்.
எனவே, அறுவடை பணிகள் பரவலாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், முத்தரப்பு கூட்டத்தை விரைவாக நடத்தி, வாடகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிா்வாகம் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.