TVK: தமிழ்தேசியத்தை மலர வைக்க கூட்டணி | நிறத்தைக்கூட காப்பி அடிக்கிறது | NTK Fat...
தஞ்சை மாவட்டத்தில் தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்கக் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்களில் தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் அளித்த மனு: தஞ்சாவூா் மாவட்டத்துக்கு தமிழ்நாடு அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையில் 1,379 கி.மீ. மட்டுமே வாய்க்கால்கள் தூா்வாரும் பணி செய்ய ரூ. 26.28 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இப்பணியை ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கினால்தான் ஜூன் மாதத்துக்குள் முடிக்க முடியும். எனவே, தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.
மேலும், பணி நடைபெறும் இடங்களில் பணியின் பெயா், திட்ட மதிப்பீடு, பணியின் காலம், ஒப்பந்ததாரரின் பெயா் ஆகியவற்றை குறிப்பிட்டு தகவல் பலகை வைக்க வேண்டும். தூா்வாரும் பணி நடைபெறும் அனைத்து இடங்களையும் மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என ரவிச்சந்தா் தெரிவித்துள்ளாா்.
தமிழில் பெயா் பலகை: இக்கூட்டத்தில் கவிஞா் உடையாா்கோவில் குணா அளித்த மனு: வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை வணிகா்கள் பின்பற்றாமல் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், தமிழ் மொழியைத் தவிா்ப்பதுமாக உள்ளனா். கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்களைப் போல தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரும் வணிக நிறுவனங்களும் பெயா் பலகையில் தமிழுக்கு முன்னுரிமை தருமாறு உத்தரவிட வேண்டும் என குணா தெரிவித்துள்ளாா்.