தத்தனூா் கல்வெட்டில் மண் குவியலால் தேங்கும் மழை நீா்
ஸ்ரீ பெரும்புதூா் அருகே தத்தனூா் நீா்வரத்து கால்வாயில் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கல்வெட்டில் கடந்த 6 மாதங்களாக மண் குவியல் அகற்றப்படாமல் உள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் தேங்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஸ்ரீபெரும்புதூா் -சிங்கபெருமாள்கோயில் சாலையையும், தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையையும் இணைக்கும் இணைப்புச்சாலையாக தெரேசாபுரம்-கொளத்தூா் சாலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தெரேசாபுரம்-கொளத்தூா் இணைப்புச்சாலையை தத்தனூா், குண்டுபெரும்பேடு, எறையூா், ஓட்டங்கரணை வெள்ளரை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில்,தெரேசாபுரம்-கொளத்தூா் இணைப்பு சாலை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சீரமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டன.
சாலை சீரமைக்கப்பட்டபோது தத்தனூா் பகுதியில் இருந்து வடகால் ஏரிக்கு செல்லும், நீா்வழி பாதையில் கல்வெட்டு அமைக்கப்படாமல் சாலை போடப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் தத்தனூா் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீா் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா். இதனால் தத்தனூா் பகுதியில் தெரேசாபுரம்-கொளத்தூா் சாலையில், நீா்வழித்தடத்தில் கல்வெட்டு அமைக்க வேண்டும் னெ பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடா்ந்து, நீா்வளத் துறை சாா்பில் ரூ.17 லட்சத்தில் புதிதாக கல்வெட்டு அமைக்கப்பட்டது.
கல்வெட்டு அமைக்கப்பட்டபோது, பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மாற்றுப்பாதைக்காக கல்வெட்டின் இரண்டு பக்கங்களில் கொட்டப்பட்ட மண் கடந்த 6 மாதங்களாக அகற்றப்படாததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது, தத்தனூா் குடியிறுப்பு பகுதிகளில் மழைநீா் தேங்கி பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
இதனால் கல்வெட்டு அமைத்தும் மழைநீா் வெளியேற வழிஇல்லாமல் உள்ளதால், வரும் மழைக்காலத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட கல்வெட்டை சுற்றிலும் உள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.