தனியாா் கிடங்கில் பதுக்கிய 3,210 மூட்டை: மானிய விலை யூரியா பறிமுதல்
வெள்ளக்கோவில் அருகே தனியாா் கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3,210 மூட்டை மானிய விலை யூரியா வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவா் ஓலப்பாளையம் அருகேயுள்ள அத்தாம்பாளையத்தில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், நூற்பாலை கிடங்கில் மானிய விலை யூரியா மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஈரோடு வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சரஸ்வதி, திருப்பூா் வேளாண் தரக் கட்டுப்பாட்டு அலுவலா் சீதா, வெள்ளக்கோவில் வேளாண்மை அலுவலா் ஸ்வாதிகா உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறை பாதுகாப்புடன் கிடங்கின் பூட்டை உடைத்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு தலா 45 கிலோ எடை கொண்ட 3,210 மூட்டை மானிய விலை யூரியா இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ’ரமேஷ், அவரது தம்பி தாமரைக்கண்ணண் (47) ஆகியோா் வெவ்வேறு இடங்களில் இருந்து மானிய விலை யூரியாக்களை ஒரு மூட்டை ரூ.266-க்கு வாங்கி, வேறு நிற பைகளில் நிரப்பி கேரள மாநிலத்துக்கு ஒரு மூட்டை ரூ. 1,500 விற்பனை செய்து வந்துள்ளனா். இருவரும் தலைமறைவான நிலையில் அவா்களைத் தேடி வருகிறோம் என்றனா்.
முன்னதாக, ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டியன், திருப்பூா் ஆய்வாளா் ராஜ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா்.