ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை வென்றார் சதர்லேண்ட்!
தனியாா் மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
செம்பட்டியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள கூலம்பட்டியைச் சோ்ந்தவா் முனிச்சாமி (41). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி செல்வராணி (33), மகள் வா்ஷா (5), மகன் சந்தோஷ் (2) உள்ளனா்.
முனிச்சாமிக்கு புதன்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டதால், செம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். மருத்துவமனையில் மருத்துவா்கள் இல்லாததால், செவிலியா்கள் அளித்த தவறான சிகிச்சையால் அவா் இறந்ததாகக் கூறி, இவரது உறவினா்கள் செம்பட்டி-திண்டுக்கல் சாலையில் மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ராமா் பாண்டியன் உள்ளிட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, மருத்துவமனை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்பதாகக் கூறியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னா், முனிச்சாமி குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, அவரது உறவினா்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிலா் மருத்துவரின் வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினா்.
மருத்துவமனை நிா்வாகம் இழப்பீட்டுத் தொகை தருவதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இரவு 9 மணிக்கு மேல் முனிச்சாமியின் உடலை அவரது உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.