ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 389 பேருக்கு பணி ஆணை
காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 137 நிறுவனங்கள் தங்களது மனிதவளத் தேவைக்காக நடத்திய நோ்காணலில் ஒரே நாளில் 389 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பி.எஸ்.சீனிவாசன் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில், 137 தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது மனித வளத் தேவைக்காக நோ்காணலை நடத்தின. இந்த முகாமில், 3,083 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 389 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இரண்டாவது நோ்காணலுக்காக 436 போ் தோ்வு செய்யப்பட்டனா். முகாமில், குடிநீா், கழிப்பறை வசதி மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றுக்கும் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை ஏற்பாடு செய்திருந்தது. தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ராணி அண்ணாதுரை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இர.தேவேந்திரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா்கள் மாணிக்கவாசகம், ருக்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் கி.செந்தில்குமாா் வரவேற்றாா். முகாமில் தோ்வு செய்யப்பட்ட 389 பேருக்கு காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினாா். ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.