செய்திகள் :

தனியிசை: "கேபர், அசல், பால் டப்பா... யாராவது 'சூப்பர் ஸ்டார்' ஆக வேண்டும்" - எழுத்தாளர் சீனிவாசன்

post image
கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட இப்போது நாம் அதிகமாக தனியிசைக்கு (Independent Music) செவிகொடுக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

தனியிசைக் காலம்:

யூடியூப் தளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகும் தனியிசைப் பாடல்கள் ஆயிரம் பார்வையாளர்களைப் பெறுவதே பெரிய விஷயமாக இருந்தது ஆனால் தற்போது சோனி மியூசிக், தின்க் இண்டி போன்ற பெரிய நிறுவனங்கள் தனியிசைப் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன. தனியிசைக் கலைஞர்கள் திரையிசையில் பங்குபெறுவதுடன், அவர்களின் பாடல்களும் திரையிசையில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. 

தமிழகத்தின் தனியிசை கடந்துவந்த பாதையை நாம் திரும்பிப்பார்க்கப் பொருத்தமாக தருணமிது. சென்னையின் கல்லூரி இளைஞர்கள் ஆங்கிலத்தில் எழுதிப் பாடிய பாடல்கள் இந்திய அளவில் கவனம் பெற்றதையும், ஏ.ஆர்.ரகுமான் திரையிசைக்கு வரும் முன் ரூட்ஸ், நெமிசஸ் அவென்யூ இசைக்குழுக்களில் இருந்ததையும், அதே வழியில் ஷான் ரோல்டன் முதல் தர்புகா சிவா வரை இன்றைய இசையமைப்பாளர்கள் பலர் தனியிசைக் கலைஞர்களாக இருந்ததையும் அடிக்கோடிட்டு காட்டும் புத்தகம் ‘தனியிசை’. ஆர்.ஶ்ரீனிவாசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம் தனியிசை உலகம் முழுவதும் எப்படி கலாசாரத்தின் அங்கமாக நிலைத்திருக்கிறது என்பதையும், அரசியல் பொருளாதார காரணங்கள் இசையில் எப்படி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கம் செலுத்துகின்றன என்பதையும் சொல்கிறது. 

தனியிசை

தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க தனியிசைக் கலைஞர்கள், தனியிசையின் பாதை பற்றி `தனியிசை' நூலின் ஆசிரியர் ஶ்ரீனிவாசனுடன் பேசினோம்…

ஶ்ரீனிவாசன் ஶ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை கவனித்தும் தொடர்ந்தும் எழுதியும் வருகிறார். இசை ஆர்வத்தால் தனது 25 வயதில் தொடங்கி கித்தார் கற்றுக்கொள்ளவும் தொடங்கியிருக்கிறார்…

சிறுவயதிலிருந்து உங்கள் இசை ஆர்வம் எப்படி பரிணமித்திருக்கிறது?

சிறுவயதில் எங்களூரில் என்னைச் சுற்றியிருந்த நண்பர்கள் பலரும் தேவாவின் பெரும் ரசிகர்களாக இருந்தனர். அது அஜித், விஜய் நட்சத்திரங்களாக வளர்ந்து வந்த காலகட்டம். தேவா அவர்கள் இருவருக்கும் நல்ல பாடல்களை வழங்கிக்கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஆதர்சம் என்றால் அது ரஹ்மான்தான். 

ரஹ்மானின் புரோக்ராமிங், அரென்ஜ்மென்ட்ஸ், சவுண்ட்ஸ், மிக்ஸிங் எல்லாமும் அவரது இசையை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டும். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ரஹ்மான்மீது பெரிய பற்றுதல் இருந்தது. என் இளம் பருவத்தில் ரஹ்மானின் தீவிர ரசிகனாக இருந்தேன்.

சென்னை வந்த பிறகு யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் ரசிக்கத் தொடங்கினேன். 2007 காலகட்டத்தில் சென்னையில் எஃப்.எம்கள் படுபேமஸாக இருந்தன. ஒருநாள் எஃப்.எம்மில் பாப் மார்லியின் ரிடம்ப்ஷன் பாடலைக் கேட்டேன், ஊரில் இருந்தவரை மேற்கத்திய இசைகயைக் கேட்டிராத எனக்கு இது மிகவும் புத்துணர்வூட்டுவதாக இருந்தது. தொடர்ந்து The Beatles போன்ற இசைக்குழுக்களை இணையத்தில் தேடிக்கேட்டேன். 

எழுத்தாளர் ஆர். ஶ்ரீனிவாசன்

ஊர்பக்கத்தில் நாம் இளையராஜா இசையைக் கேட்காமல் இருக்கமுடியாது. ஆனாலும் கித்தார் படிக்கத்தொடங்கிய பிறகு இளையராஜாவினுடைய இசையையையும் உன்னிப்பாக ரசிக்கத் தொடங்கினேன். 

2009ல் எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்தது. நான் இருந்த கோரமங்களா ஏரியாவில் பல இசை நிகழ்ச்சிகள் நடக்கும். ஏகப்பட்ட பப்கள் இருப்பதனால் ராக் இசைக் கச்சேரி நிறைய நடக்கும். அங்குதான் கித்தார் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். என்னுடன் கற்றுக்கொண்டவர்கள் பலவிதமான இசையை அறிமுகப்படுத்தினார்கள். 

யூடியூப் வந்த பிறகு அல்காரிதம் பல பாடல்களை ரெகமண்ட் செய்தது. ஒன்றிலிருந்து இன்னொன்று என அது அனுமர் வால் மாதிரி நீண்டுகொண்டே போகும். 

உங்கள் வாழ்க்கையில் இசை என்பது என்னவாக செயலாற்றுகிறது?

இசை என் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஸ்பேசாகப் பார்க்கிறேன். நான் என்ன வேலை செய்தாலும் பின்னணியில் இசை இருந்துகொண்டே இருக்கும். வீடு சுத்தம் செய்வது முதல் பயணம் செய்வது வரை எப்போதும் எனக்கு இசை வேண்டும். இப்படி பின்னணியில் ஓடும் பாடல்கள் நன்றாக இருந்தால் அதை மீண்டும் கேட்பேன். அதற்கு ரிவியூ எழுதுகிறேன் என்றால் மீண்டும் ஒருமுறைக் கேட்டு எழுதுவேன்.  

ஒரு பின்க் ஃப்ளாய்டின் பாடலோ அல்லது இளையராஜாவின் பாடலோ எதுவாக இருந்தாலும் ஒரு சிறந்த பாடல் நமக்கான பிரத்யேக வெளியை உருவாக்கிக் கொடுத்து அதில் பிரவேசிக்க வைக்கும்.  

உலகம் முழுவதுமே இசை மேல்தட்டு வகுப்பினருக்கானதாக இருந்தது மாறி, அடித்தட்டு மக்களும் இசையை அணுகவும் உருவாக்கவும் தொடங்கியிருக்கின்றனர். தமிழகத்தில் இது எப்படி மாறியிருக்கிறது என நினைக்கிறீர்கள்?

யோகி.பி
யோகி.பி

இசை மட்டுமல்ல இலக்கியமும் கூட ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கானதாக இருந்துள்ளது. அதிலும் சிறந்த எழுத்தாளர்கள் இருந்தனர். ஆனால் காலப்போக்கில் இலக்கியத்தில் நிலைமை மாறியது. 

தமிழ்த் திரையிசையின் வருகைக்கு முன், இங்கு கர்நாடக சங்கீதமும் நாட்டுப்புற இசையும் இருந்தன. அப்போது தமிழ் சினிமா இசையையே ஏளனமாகப் பார்த்த சூழலும் நிலவியது.  ஆனால் இப்போது அவற்றை உடைத்து சினிமா இசை ஒரு ஆலமரமாக நிற்கிறது.

தனியிசை நீண்டகாலமாக இருந்தாலும் உலகமயமாக்களுக்குப் பிறகுதான் நம்மால் எளிதாக பிறநாட்டு இசையை அணுக முடிந்தது. மலேசியாவைச் சேர்ந்த யோகி பி -யின் நட்சத்திரா ஆல்பம் இங்கு கவனிக்கப்பட்டது. 

பால் டப்பா

அனைவரிடமும் இப்போது இசையை அணுகுவதற்கான வசதியும் உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் வந்துவிட்டது. பால்டப்பா கூட ஆரம்பக் காலத்தில் ஒரு பாடலை மொபைலிலேயெ ரெக்கார்ட் செய்ததாகக் கூறினார். 

இன்று எல்லா இசைக்குமே அதற்கான ஒரு தளம் இருக்கிறது. ராப், திரையிசைப் பாடல்கள், ராக், மெட்டல் இவற்றைக் கடந்து நாட்டுப்புற கலைஞர்களுக்காக சென்னை சங்கமம், மார்கழியில் மக்களிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

இவ்வளவு இருந்தும் நம் இசை ஏன் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இல்லை, திரையிசைப் பாடல்கள் மட்டுமே எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதற்கான விடையைத்தான் என் புத்தகம் தேடுகிறது. 

தமிழ் இசையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவில் பாடல்கள் பயன்பாடு முழுவதுமாக நிற்காது. ஆனாலும் இன்னும் பல மடங்கு குறையும். தமிழ் சினிமா நாடகங்களின் மரபுவழி வந்ததால் பாடல்கள், நகைச்சுவை மற்றும் வசனங்கள் வழி கதை சொல்வது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. 

உலக சினிமாவில் அப்படி கிடையாது. தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நம்மால் உலக சினிமாக்களை அணுக முடியாததும் இதற்கு ஒரு காரணம். 

முன்னெல்லாம் ஒரு படத்துக்கு 5 பாடல்கள் கட்டாயம் என்றிருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் பாடலே இல்லாமல் ஒரு படம் எடுத்தார், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஒரு பாடலை பயன்படுத்துகிறார். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறிவருகிறது. 

Tamil Music Directors

பாடல்கள், பின்னணி இசை என இரண்டையுமே ஒரு இசையமைப்பாளர் கையாள்வதுக்கு மாற்றாக பின்னணி இசை மட்டும் ஒருவர் செய்வது போதுமென்றால் அவர் அதில் அதிக கவனம் செலுத்துவார். இதனால் திரைப்படங்களின் தரமும் உயரும். இளையராஜாவுக்குப் பிறகு நல்ல பின்னணி இசையைக் கொடுக்கக் கூடிய இசையமைப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

தனியிசைக் கலைஞர்கள் இன்னும் அதிகமாக வருவார்கள். அவர்களுக்கான சந்தையும் வரவேற்பும் உருவாகும் என்று கருதுகிறேன்.

தனியிசைக் கலைஞர்கள் பெரிய நிறுவனங்களுடன் இணையும்போது, அவர்களது மார்க்கெடிங்குக்கான தியாகங்களைச் செய்ய வேண்டியதிருக்கிறதே? 

நிறுவனங்கள் எந்த அளவு பாடலில் தலையிடலாம் என்பதில் அவர்களுக்குள் புரிதல் இருந்தால் இது நன்றாக இருக்கும். பாடல் எழுத்திலோ இசையிலோ இல்லாமல் வீடியோ அல்லது அழகியல் (ஏஸ்தெடிக்ஸ்) சம்பந்தமான விஷயங்களில் தலையிடுவது பிரச்னை கிடையாது. 

என் விருப்பம் என்னவென்றால், ஒரு தனியிசைக் கலைஞராவது சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும். அதற்கு பெரிய லேபிள்கள் வேண்டும். அவர்கள் இல்லாமல் இது நடக்காது. அவர்களிடம் இருந்து சில அழுத்தங்களும் இருக்கும். ஆனால் இங்கிருந்து ஒரு சூப்பர் ஸ்டார் வரும்போது, இவர்கள்தான் இனி முன்னணி இசைக்கலைஞர்கள் என லேபிள்கள் நினைக்கும்போது இந்த அழுத்தங்கள் குறையும். 

Siennor


சியென்னோர் அல்லது கேபர் ஒரு ஸ்டாராக வளர்ந்தால் அவர்களிடம் இருந்து ஒரு சூழல் வட்டம் உருவாகும். இப்போதே தனியிசைக்கு நல்ல சந்தை இருக்கிறது அசல் கோலாரின் பாடல்கள் ஒரு கோடி பார்வைகளைத் தாண்டியிருக்கின்றன. இதன் கட்டமைப்பு இன்னும் வலுவடையும். 

கலைஞர்கள் நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு இணங்கிப்போவதை நாம் குறை சொல்ல முடியாது. எல்லாரும் சுயாதீனமாகவே இருக்க வேண்டும் என நாம் கூறமுடியாது. 

Brodha V போன்ற ராப்பர்கள் இன்றும் சுயாதீனமாக மட்டுமே இயங்குகின்றனர். அவர்களது யூடியூப் பக்கத்தில்தான் பாடல்களை ரிலீஸ் செய்கின்றனர். OfRo பல பாடல்களை அட்டி கல்ச்சர் லேபிளில் வெளியிடுகிறார். அங்கிருந்து பெரிய லேபிளுடன் இசைக்கலைஞர்கள் பணிபுரிகிறார்கள்.

தனியிசையை சினிமாவுக்கான என்ட்ரி டிக்கெட்டாக நினைப்பவர்கள், விரைவில் பிரபலமடைய வேண்டும் என நினைப்பவர்களும் இருக்கின்றனர். இதில் சிக்கல் என்னவென்றால் நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தத்துக்கு உட்பட்டு இவர்கள் தனியிசை என்ற பெயரில் இன்னுமொரு சினிமா பாடலைத்தான் உருவாக்குவார்கள். 

என் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன், சியென்னார், கேபர் மாதிரியானவர்களே தனியிசைக் கலைஞர்கள். அவர்களது பாடல்களில் அவர்களின் சுயமான சிந்தனையை நாம் அப்பட்டமாக உணர முடிகிறது. சாய் அபியங்கர் போன்றவர்கள் உருவாக்குவதை மாற்றிசை என்று கூறலாம். இந்த எல்லைகள் துல்லியமற்றவையாகத்தான் இருக்கின்றன. நாம் பேச பேசதான் இவற்றை சரியாக வரையறுக்க முடியும். 

கேபர் வாசுகி, சியென்னாரின் பாடல்கள் பேசும் தத்துவம், வாழ்வியல் போன்ற ஆழமான விஷயங்களுக்கு மைய அலையில் இருக்கும் ரசிகர்களிடத்தில் வரவேற்பு இருக்குமென்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக! நான் சமீபத்தில் சஞ்சய் சுப்பிரமணியன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவர் கேபர் பாடல்களை விரும்பிக் கேட்பதாகாக் கூறினார். மரபிசை வழிவந்த அவரே இதைக் கூறுவது மிகப் பெரிய அத்தாட்சி இல்லையா?

தமிழ் சினிமாவின் டெப்ளேட் பாடல்களில் இல்லாத ஓர் உண்மைத்தன்மை இவர்களது பாடல்களில் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் கேபர், சியென்னாரைக் கொண்டாடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

கேபர் வருகைக்கு முன்பு இங்கு ஆங்கிலத்தில் எழுதிப்பாடிய தனியிசைக் கலைஞர்கள்தான் அதிகம். அவர்களுடன் நம் மக்களால் ஒத்துப்போக முடியாமல் இருக்கலாம். ஆனால் கேபர் தமிழில் எழுதுவதுடன், ஆங்கில தனியிசைக் கலைஞர்களின் பாடுபொருட்களை விடுத்து, நம் வாழ்வோடு நெருக்கமான பாடல்களை எழுதுகிறார்.

Kaber Vasuki

2010களில் ஆல்பம் சாங்குகள் ஹிட் ஆன ட்ரெண்ட் இருந்தது. விவேக் ஜி, டீஜே, HAVOC Brothers போன்றோர்களைப் பற்றி புத்தகத்தில் குறிப்பிடவில்லையே…

தனியிசைக்கு பலர் பங்காற்றிள்ளனர். எல்லாரையும் குறிப்பிட்டால் பெயர்களை அடுக்கிக்கொண்டு போனதுபோல் இருக்கும். அது வாசகர்களுக்கும் அசதியை ஏற்படுத்தக்கூடும். அதனால் சில விடுபடல்கள் இருப்பது இயல்புதான்.

இந்த புத்தகத்தை எழுதும்போது எனக்கு முன் மாதிரியாக எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லை. 90களுக்குப் பிறகு உள்ள சூழலை, யோகி பியின் வருகையை மையமாக வைத்துதான் எழுத முதலில் திட்டமிட்டேன். ஆனால் இதன் பின்புலத்தின் கூறும் கேன்வாஸ் இல்லாததால் ஆரம்பகட்டத்திலிருந்து எழுத வேண்டியிருந்தது. 

இதை ஒரு கான்வாசாக வைத்துக்கொண்டு இன்னும் ஒரு 5 வருடத்தில் இதேபோன்ற ஒரு புத்தகத்தை எழுதத் திட்டமிட்டுள்ளோம். 

இதில் பல கிளைகள் இருக்கின்றன. யோகி பியிலிருந்து ஹிப் ஹாப் தமிழா, அசல் கோளாறு, கெலித்தி வரை ராப்பர்களை முன்வைத்து இன்னொருவர் ஒரு புத்தகம் எழுதலாம்.  

ஓர் இசை ரசிகராக ஏஐ பயன்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் டெக்னாலஜியை வெறுக்கவில்லை. ஆனால் அதை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் வேண்டும். ஒரு பாடலின் ஆன்மாவை மேம்படுத்துவதற்காக ஏஐ பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. 

ரஹ்மான் வந்த புதிதில் அவர் வெறும் புதிய பீட்களை மட்டும் கொடுக்கவில்லை. கர்நாடக சங்கீதத்தின் சாயலில் அமைத்திருந்த மெலடியை தொழில்நுட்பம் கொடுக்கும் பீட்கள் வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டின. வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தியிருந்தால் ரஹ்மான் ஒரு 5 ஆண்டுகள் கூட நிலைத்திருந்திருக்க முடியாது.  அந்தமாதிரி, ஏஐ, தொழில்நுட்பங்களை உப்பு போலதான் பயன்படுத்த வேண்டும்.  

A.R.Rahman

சென்னையில் ஒரு தனியிசை ரசிகர் ஒரு ஆண்டில் மிஸ் செய்யக் கூடாத நிகழ்வுகள் என்னென்ன?

சென்னை சங்கமும் மார்கழியில் மக்களிசையும் முக்கிய நிகழ்வுகள். கேபர், சியென்னார் போன்றவர்களின் கச்சேரிகளை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். 

தனியிசை இன்றும் ஒரு கல்ட்டாகத்தான் (Cult) இருக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள்தான் ஆர்வம் காட்டுவதால், தனியிசைக் கலைஞர்களை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து நாம் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள முடியும். 

சென்னையில் பெங்களூருபோல இன்னும் பெரிய இசைத் திருவிழாக்கள் நடக்கத் தொடங்கவில்லை. ஆங்கில நாளிதழ்களில் தனியிசை நிகழ்வுகள் குறித்த குறிப்புகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றனர். ஆனால் இப்போது யாரும் நாளிதழ் வாசிப்பதில்லை என்பதால் அதன் வழியாகச் சென்றடைதலும் குறைந்துவிட்டது.

பவதாரிணி: "கவனமெல்லாம் இசையிலிருந்ததால், குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுட்டேன்" - இளையராஜா உருக்கம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு இதே நாளில் (ஜனவரி 25, 2024) மறைந்தார். இந்நிலையில், தனது மகளின் நினைவு நாளான இன்று இளையராஜா எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதி... மேலும் பார்க்க

`உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்… உனக்குள்தானே நான் இருந்தேன்' - என்றும் மறவா ஜெயச்சந்திரன் ஹிட்ஸ்

`சாகா வரம் போல் சோகம் உண்டோ' என்ற வாக்கியம் கலைஞர்களிடத்தில் மட்டும், `சாகா வரம் போல் மகிழ்வேதும் உண்டோ' என மாறிவிடுகிறது.கலைஞர்கள் மட்டும்தான் தாங்கள் மறைந்த பின்பும் தங்களின் கலைகளின் ஊடாக காலம் உள்... மேலும் பார்க்க

AR Rahman : ``ரஹ்மான் நட்பாகப் பழகக்கூடியவர் அல்ல..." - பாடகர் சோனு நிகம் ஓப்பன் டாக்

தமிழ் சினிமாவிலிருந்து இந்தி சினிமா அங்கிருந்து ஹாலிவுட் என இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலமானவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "கலையும்,இசையும் இல்லையென்றால் இந்தியர்களுக்கு வாழ்க்கையே இல்லை"- இளையராஜா

சென்னை ஐஐடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இளையராஜா பேசியிருக்கிறார்.சென்னை ஐஐடியில் நேற்று ( ஜனவரி 9) கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் இளையராஜாவும் ... மேலும் பார்க்க

Jayachandran: `ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு...' - மறைந்தார் பிரபல பாடகர் ஜெயச்சந்திரன்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால், கேரளா திருச்சூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.கேரளாவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், மலையாளம... மேலும் பார்க்க

Krishnakumar Kunnath - KK (கிருஷ்ணகுமார் கண்ணதாசன்) பாடகர்

கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK)பிறப்பு: 1968, சென்னை, இந்தியாஇறப்பு: 31 மே 2022கோடைச் சொற்கள்: இந்திய இசை, பாடகர், இசையமைப்பாளர்மருத்துவம்: கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK) தமிழில் அதிகம் பரபரப்பாக பேசப்படும... மேலும் பார்க்க