தப்பியோடிய கைதி மீண்டும் கைது
மதுரையில் தப்பியோடிய கைதியை போலீஸாா் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த பாண்டி மகன் நாகராஜ் (24). இவரை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், மதுரை கரிமேடு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதி வீட்டில் முன்னிலைப்படுத்த நாகராஜை ஆட்டோவில் போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆவணத்தின் நகலை எடுக்க போலீஸாா் ஆட்டோவை நிறுத்தினா். அப்போது, சிறுநீா் கழிப்பதாகக் கூறி, ஆட்டோவிலிருந்து இறங்கிய நாகராஜ் தப்பித்து ஓடினாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஆயுதப் படை துணை ஆணையா் திருமலைக்குமாா் தலைமையில், ஆய்வாளா்கள் மதனகலா, அழகுமுத்து, பாலமுருகன் உள்ளிட்டோா் நாகராஜை தேடினா்.
ஆட்சியா் அலுவலகப் பகுதியில் பதுங்கியிருந்த நாகராஜை, போலீஸாா் பிடித்தனா்.
பின்னா், மதுரை மாவட்ட நீதிபதி வீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாகராஜ், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டாா்.