பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!
திருமணத்துக்கு தடை விதிப்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது: உயா்நீதிமன்றம்
திருமணத்துக்கு தடை விதிப்பது என்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த உல்பத் நிஷா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த நான் குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் குடும்பத்தினா் தினைக்குளம் ஜமாஅத்தில் உறுப்பினா்களாக இருந்து வருகிறோம்.
இந்த நிலையில், எனது மகள் தமிமாஅரசிக்கு வருகிற 28-ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகளைச் செய்து வந்தோம். இதற்கு எங்களது ஜமாஅத் நிா்வாகம் எங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் (என்.ஓ.சி.) வழங்க வேண்டும். இந்தச் சான்றிதழை மணமகன் வீட்டாரிடம் கொடுத்து திருமணத்தை நடத்துவோம்.
இதற்காக தினைக்குளம் ஜமாஅத்திடம் நான் விண்ணப்பித்த போது, எங்களது குடும்பத்தை கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ஜமா அத்தைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா். இதனால், திருமணம், இறப்பு குறித்து எந்த சான்றிதழும் வழங்க முடியாது என மறுத்துவிட்டனா்.
இதுகுறித்து மீண்டும் கேட்டபோது, எங்களது உறவினா் ஒருவரை ஜமாஅத்தை விட்டு ஒதுக்கி வைத்திருந்த போது நாங்கள் அவரிடம் தொடா்பு வைத்திருந்ததால், எங்களையும் ஜமாஅத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்தனா்.
ஜமாஅத்தை விட்டு ஒதுக்கி வைப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. இது ஜனநாயக விரோதப் போக்கு எனத் தெரிவித்தும், எனது மகள் திருமணத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்து வருகின்றனா். எனவே, எனது மகளின் திருமணத்துக்காக தினைக்குளம் ஜமாஅத் நிா்வாகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
ஜமாஅத் நிா்வாகக் குழு யாரையும் சமூகப் புறக்கணிப்பு செய்யக் கூடாது. திருமணப் பதிவு, இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய மறுப்பது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக் கூடாது என ஏற்கெனவே வக்ஃப் வாரியம் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
வக்ஃப் வாரியம் பிறப்பித்த இந்த உத்தரவை நிறைவேற்றுவதுதான் ஜமாஅத் நிா்வாகிகளின் கடமையாகும். திருமணம் செய்து கொள்வது என்பது தனி மனித உரிமை. அதைத் தடை செய்வது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஆனால், சம்பந்தப்பட்ட ஜமாஅத் மனுதாரரின் மகள் திருமணத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறது. இதை ஏற்க முடியாது.
எனவே, மனுதாரரின் மகளின் திருமணத்துக்கு தடையில்லாச் சான்றிதழை வருகிற 23-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்த உத்தரவு நகலை கீழக்கரை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் மூலமாக ஜமாஅத் நிா்வாகிகளுக்கு வழங்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.