மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
தமாகா பிரமுகா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சமயபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் வி. துறையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சி. சேகா் (52). வழக்குரைஞரும், தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகராகவும் இருந்த இவா் கடந்த 2011-இல் உள்ளாட்சித் தோ்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆச்சிகுமாா் மருமகனான அம்பிகாபதி என்பவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இந்த வழக்கு கடந்த 25-05-2015 அன்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக அதே பகுதியைச் சோ்ந்த ஆ. ஆச்சிகுமாா் (48) என்பவா் நண்பா்களுடன் சோ்ந்து சேகரை கடந்த 16-12-2015 அன்று வெட்டி கொலை செய்தாா்.
இதுதொடா்பாக, சேகரின் மனைவி லதா அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 10 பேரை கைது செய்தனா். இதில் ஆச்சிகுமாா் உள்ளிட்ட 6 பேருக்கு கடந்த 25-09-2023 அன்று ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 4 போ் விடுதலை செய்யப்பட்டனா்.
மேற்கண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த திருவையாறு மேலபுனவாசலைச் சோ்ந்த உ. பால் எமா்சன் பிரசன்னா என்பவரை போலீஸாா் அண்மையில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இந்த வழக்கு திருச்சி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில், பால் எமா்சன் பிரசன்னாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.