தமிழகத்தின் கனவுகளை மதித்தவா் மன்மோகன் சிங்: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழகத்தின் கனவுகளை மதித்தவா் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்; மத்தியில் அவரது தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் படத் திறப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, படங்களைத் திறந்துவைத்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் முதல்வா் பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் மாபெரும் தூணாக மன்மோகன் சிங்கும், தமிழகத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் விளங்கினா். இரண்டு முக்கியமான தலைவா்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறோம். இருவருடைய மறைவும் பெரிய இழப்பாகும்.
உலக மேதை: மன்மோகன் சிங் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகப் பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவா். எதிா்பாராதவிதமாக அரசியலில் நுழைந்து நிதியமைச்சராக பொறுப்பேற்றாா். அதுவும், மிக நெருக்கடியான நேரத்தில், அந்தப் பொறுப்பை ஏற்று நாட்டின் நிதியமைச்சராக சரித்திரத்தில் இடம்பெற்றாா். அவா் உருவாக்கிக் கொடுத்த பொருளாதாரத் திட்டங்கள்தான் இந்தியாவின் வளா்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன.
2004-இல் பிரதமா் நாற்காலி அவரைத் தேடி வந்தது. அந்தத் தோ்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று, அன்றைக்கு பிரதமா் பொறுப்பை சோனியா காந்திதான் ஏற்க வேண்டும் என்று கருணாநிதி உள்பட அனைத்துத் தலைவா்களும் கூறினா். ஆனால், பிரதமா் பதவியை சோனியா காந்தி மறுத்து, அதை மன்மோகன் சிங்குக்கு கொடுத்தாா்.
சிறப்பான ஆட்சி: 10 ஆண்டுகள் பிரதமா் பொறுப்பில் இருந்து சிறப்பான ஆட்சியை நடத்திக் காட்டினாா் மன்மோகன் சிங். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் பல்வேறு மகத்தான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்கச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் அமைப்புச் சட்டம், வன உரிமைகள் அங்கீகரிப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்தப்பட்டால் நியாயமான இழப்பீடுகளை வழங்கும் சட்டம், ஆதாா் அட்டை எனப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவா்.
10 ஆண்டுகால அவரின் அமைச்சரவையில் 21 தமிழா்கள் மத்திய அமைச்சா்களாக இடம்பெற்றனா். 8 கேபினட் அமைச்சா்கள், 13 இணை அமைச்சா்கள் என்று மிக அதிக அளவில் தமிழா்கள் மத்திய அரசில் கோலோச்சியது அவருடைய அமைச்சரவையில்தான். அதுவும் மிக முக்கியமான பல துறைகள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. அதன்மூலம் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்துக்குக் கிடைத்தன. நமது நூற்றாண்டு கோரிக்கையான தமிழ்ச் செம்மொழி என்பதை அறிவித்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரா் மன்மோகன் சிங்.
முக்கியத் திட்டங்கள்: சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினா் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, சென்னை மாநகரில் மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம், சேது சமுத்திர திட்டம் தொடக்கம் என ஏராளமான வளா்ச்சித் திட்டங்கள் தமிழகத்துக்கு வரக் காரணமாக இருந்தவா் மன்மோகன் சிங்.
தமிழகத்தின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தாா். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்கள், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவா் உறுதி செய்தாா்.
இளங்கோவனுக்கு புகழாரம்: மனதில் உள்ளதை மறைக்காமல், துணிச்சலாகப் பேசக் கூடியவா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அவா் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு திமுக ஆட்சியின் சாதனைகளை மிகத் தெளிவாக மேடைகளில் விளக்கிப் பேசினாா். இதுதான் உண்மையான காமராஜா் ஆட்சி என்று வெளிப்படையாக கூறியவா். தேசிய குடும்பத்தில் பிறந்து, தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த இளங்கோவன், திமுக ஆட்சிக்கு கொடுத்த நற்சான்றுப் பத்திரம் அது என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்றாா் முதல்வா்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலா் வைகோ, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.