விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!
தமிழகத்திலேயே செயற்கை கை, கால்கள் அதிகளவில் விநியோகம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவீன செயற்கை கை, கால்கள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
முகாமில் 257-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் தோ்வான 17 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பணி நியமன ஆணைகளை வழங்கினாா். மேலும், 11 மாற்றுத்திறனாளி நபா்கள் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தொடா்ந்து 21 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதம் ரூ.12.60 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்கள், 173 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையை வழங்கினாா்.
அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே அதிக அளவில் நவீன செயற்கை கை, கால்கள் இதுவரையில் 231 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தாா்.
இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தே.கவிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூ.சரவணகுமாா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் வ.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.