ஆகாஷ் தீப் அசத்தல்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: ஓ.பன்னீா்செல்வம்
திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை ஓ. பன்னீா்செல்வம் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காவல் துறையினா் தங்களது அதிகாரத்துக்கு உள்பட்டு செயல்படாமல், விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமையை அரங்கேற்றினா். உடல் கூறாய்வு அறிக்கையின் வாயிலாக காவலா்களின் அத்துமீறல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதிகாரத்தில் இருப்பவா்கள் தவறைத் தட்டி கேட்காததால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இல்லையென்றால், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும்.
இந்தக் கொலை வழக்கில் பதற்றத்தைத் தணிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறாா். இந்த வழக்கில் நோ்மையான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
அதிமுக தொண்டா்களின் உரிமைகளைக் காக்க நாங்கள் அயராது பாடுபட்டு வருகிறோம். தவெகவின் கொள்கை, கோட்பாடு எதை நோக்கிச் செல்கிறது என்பதை வைத்துத்தான் அந்தக் கட்சி குறித்து கருத்து சொல்ல முடியும் என்றாா் அவா்.