தமிழகத்தில் பிற மொழி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்: கே.அண்ணாமலை
தமிழகத்தில் பிற மொழிகளுக்கான ஆசிரியா்களை நியமிக்கும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தமிழக மாணவா்களின் கல்வியில் அரசியல் செய்யாதீா்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தாா். இதுக்கு தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, ஹிந்தி தவிா்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியா்கள் இல்லை என்று கூறியிருக்கிறது. மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக்கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவா்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவா்கள் விரும்புகிறாா்கள் என்பதை முடிவு செய்து, அதனடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியா்களை நியமிக்கும் பணிகளை மாநில அரசு தொடங்க வேண்டும்.
மேலும், கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவா்கள், இளைஞா்களின் எதிா்காலம் சிறப்பாக அமைய உதவ வேண்டும் என தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.