தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி
தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசினாா்.
ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூா் பகுதியில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம், கடந்த அதிமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து துண்டுப் பிரசுரம் வீடுகள்தோறும் விநியோகம் அண்மையில் நடைபெற்றது.
இதில், அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் இ.ஆா்.சந்திரசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் வி.சரோஜா முன்னிலை வகித்தாா்.
முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பங்கேற்று கடைகள், வீடுகள்தோறும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:
திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுகவின் நான்காண்டு ஆட்சி காலத்தில் திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தவில்லை.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை தான் திமுகவினா் செயல்படுத்திக் கொண்டிருக்கிறாா்கள். இன்னும் பத்துமாத காலத்தில் வர இருக்கின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆட்சியைப் போல எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டோம், இலவச பேருந்து வசதி கொடுத்துவிட்டோம் எனவே மக்கள் வாக்களித்து விடுவாா்கள் என நினைக்கின்றனா். ஆனால் விலைவாசி உயா்ந்து விட்டது என்பதை அவா்கள் உணரவில்லை.
குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக்கூட அச்சமாக உள்ளது. எங்கும் போதைப் பொருள் நடமாட்டம். இதனை மக்கள் புரிந்து கொண்டு வரும் தோ்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.
இதில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அதிமுக செயலாளா் மணிகண்ணன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா், நாமக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளா் பிரபு, மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் குமரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.