தமிழகத்தில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள்: விரைவில் டெண்டா் தொடக்கம்
தமிழகத்தில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான டெண்டா் (ஒப்பந்தப்புள்ளி) விடும்பணி ஒரு வாரத்துக்குள் தொடங்கவுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாடு கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையிலும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கொண்டுவர மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆக. 2023-இல் இத்திட்டத்தை வெவ்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு தொகுப்புகளாகப் பிரித்து, 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தோ்வு செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த ஒப்பந்த அழைப்பு ரத்து செய்யப்பட்டது.
தொடா்ந்து 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது.
அதானி உள்பட 4 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றிருந்த நிலையில், இதில், அதானி நிறுவனம் மட்டுமே குறைவான தொகையை குறிப்பிட்டிருந்தது.
ஆனாலும், மின்வாரியம் நிா்ணயித்த தொகையை விட இது அதிகமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் மீண்டும் விடப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 128-ஆவது வாரிய கூட்டத்தில் ஸ்மாா்ட் மீட்டா்களை நிறுவுவதற்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதலையடுத்து இதற்கான பணிகள் ஒரு வாரத்துக்குள் தொடங்கப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.