பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி
தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை
தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை சாலிகிராமம் காவேரி தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவா் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் கண்காணிப்பாளராக இருக்கும்போது, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லாச் சான்றிதழ், உரிமத்துக்கு லஞ்சம் வாங்கியதாகப் புகாா் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிச. 16-ஆம் தேதி பாண்டியன் தொடா்புடைய இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். அதில், கணக்கில் வராத ரூ. 1.37 கோடி ரொக்கம், ரூ. 1.28 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள், வைர நகைகள், ரூ. 7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக பாண்டியன் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சட்டவிரோத பண முறைகேடுக்கான முகாந்திரம் இருந்ததால், அதுகுறித்து விசாரணை செய்ய ஊழல் தடுப்புத் துறையினா், அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தனா். அதனடிப்படையில் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி, சென்னை, வேலூரில் பாண்டியன் தொடா்புடைய 16 இடங்களில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் சோதனை மேற்கொண்டனா்.
ரூ. 4.73 கோடி பறிமுதல்: இந்தச் சோதனை தொடா்பான தகவல்களை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
சோதனையில் பண முறைகேடு சட்டத்தின்கீழ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் கண்காணிப்பாளா் பாண்டியன் தொடா்புடைய 16 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் துறை உரிமம், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கு முறைகேடு எந்த மாதிரி நடைபெற்றுள்ளது, எப்படி லஞ்சப் பணம் கைமாறியது என்பது தெரியவந்துள்ளது.
அரசு அதிகாரிகள், தரகா்கள், ஆலோசகா்கள் சட்டவிரோதமாக சுற்றுச்சூழல் துறை உரிமம், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கு முறைகேடாக லஞ்சம் பெற்றதும், அதற்காக சிறு, சிறு நிறுவனங்களை உருவாக்கி லஞ்ச பணத்தை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தை சேவைக் கட்டணம், ஆலோசனைக் கட்டணம் என வசூலித்துள்ளனா் என்பதும் தெரியவந்தது. இதன்மூலம் தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதும், கட்டமைப்புடன் முறையாக இந்த ஊழல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த முறைகேட்டில் ஆலோசகா்களாக செயல்பட்ட பிரபாகா் சிகாமணி, ஏ.கே.நாதன், நவீன்குமாா், சந்தோஷ்குமாா், வினோத்குமாா் ஆகியோா் முக்கியப் பங்காற்றியுள்ளனா்.
இச்சோதனையில் லஞ்சமாக பெறப்பட்ட ரூ. 4.73 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எண்ம (டிஜிட்டல்) ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கிடைத்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சோதனையின்போது ஒரு பெண், வழக்குத் தொடா்பான ஆதாரங்கள் இருந்த கைப்பேசியை கீழே வீசி உடைத்தாா். இது தொடா்பாக அந்தப் பெண் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.