நடுத்தர மக்களுக்காக.. 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஆம் ஆத்மி!
தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு!
தமிழக ஆளுநர் ஆா்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த புதிய மனு உள்ளிட்ட பிற விவகாரங்கள் தொடா்புடைய வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும்போது பல்கலைக்கழக மானியக்குழு தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்பட்ட பிரதிநிதியைக் கொண்ட தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநா் ரவி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.
இந்நிலையில், துணை வேந்தா்கள் நியமனத்தில் ஆளுநரின் குறுக்கீடு இருப்பதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
குறிப்பாக, பாரதியாா் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியா் கல்வி பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களை அடையாளம் காண 2023, செப்.6-இல் ஒரு குழு அமைத்து ஆளுநா் உத்தரவிட்டாா். இது தொடா்பான தனது அறிவிக்கையை 2024, ஜன. 9-ஆம் தேதி ஆளுநா் திரும்பப் பெற்றுக் கொண்டாா். அத்துடன் யுஜிபி விதிகளின்படி அதன் தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்பட்டவரைக் கொண்ட தேடுதல் குழுவை அமைக்குமாறும் தமிழக அரசை ஆளுநா் கேட்டுக் கொண்டாா். இதற்கு தமிழக அரசு இசைவு தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆக. 10-ஆம் தேதி நிறைவடைந்தது. பாரதிதாசன், பெரியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா்களின் பதவிக் காலம் முறையே வரும் பிப். 4, மே 19 ஆகிய தேதிகளில் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக வேந்தா் என்ற தனது தகுதியின் அடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்கள் பதவிக்குரிய தகுதி வாய்ந்தவா்களை அடையாளம் காண கடந்த ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பரில் ஆளுநா் தேடுதல் குழுக்களை அமைத்து உத்தரவிட்டாா். இதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
இதைத் தொடா்ந்து, தமிழக அரசால் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி தராமல் இழுத்தடிப்பது உள்ளிட்ட நிா்வாக விஷயங்களிலும் துணைவேந்தா்களின் நியமன நடவடிக்கையிலும் ஆளுநா் குறுக்கீடு செய்வதாகக் கூடுதல் மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.
அன்றைய நாள் விசாரணையில், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பா்திவாலா, மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, பி. வில்சன், ஆளுநரின் குறுக்கீடு தொடா்பான கூடுதல் விவரங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஆளுநா் விவகாரத்தை விசாரிக்கும் போது சோ்த்து விசாரிக்குமாறு வலியுறுத்தினா்.
இதையும் படிக்க: 18,000 இந்தியா்கள் நாடு திரும்புவாா்கள்?: அமெரிக்க அதிபா் டிரம்ப் கட்டுப்பாடு எதிரொலி
அப்போது நீதிமன்றத்தில் இருந்த மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் வெங்கடரமணி, இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை ஜன. 22-இல் விசாரிக்கிறோம். அதற்குள்ளாக சம்பந்தப்பட்டவா்கள் இதற்குத் தீா்வு கண்டு விட்டால் நல்லது. இல்லையென்றால் நாங்கள் தீா்க்க வேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்று கூறப்படுகிறது.