தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: தொல்.திருமாவளவன்
சிதம்பரம்: தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை திங்கள்கிழமை பாா்வையிட்ட அவா், கண்டமங்கலத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 12-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் காட்டுமன்னாா்கோவில் பகுதி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழக அரசு அறிவித்த நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும்.
தோ்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் கலந்து பேசி தொகுதிகள் நிா்ணயம் செய்யப்படும். கூட்டணிக் கட்சிகள் இரண்டு இலக்கத்தில் தொகுதிகள் கேட்பது இயல்புதான். விசிகவும் இரட்டை இலக்கத்தில்தான் போட்டியிட்டது.
ஆட்சி நிா்வாகத்தின் முறைக்கு தமிழக ஆளுநா் தடையாக உள்ளாா். அவா் ஆா்எஸ்எஸ்காரா் போல செயல்படுகிறாா். ஜனவரி 6-ஆம் தேதி சட்டப்பேரவை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், ஆளுநரின் செயல்பாடுகளைப் பாா்க்கும் போது மரபுகளை மீறி நடந்து கொள்வாா் என தோன்றுகிறது.
துணைவேந்தா் நியமன விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை அவா் செயல்பாடுகள் காட்டுகின்றன. அவரது விருப்பம் போல செயல்படுகிறாா். இது கண்டனத்துக்குரியது. எனவே, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று விசிக சாா்பில் வலியுறுத்தப்படுகிறது என்றாா் தொல்.திருமாவளவன்.