குளிரில் நடுங்கி உயிரிழக்கும் குழந்தைகள்!
பாலஸ்தீன நகரமான காஸாவில் கடந்த 48 மணிநேரத்திற்குள் மூன்று குழந்தைகள் குளிரில் நடுங்கி உயிரிழந்துள்ளன.
இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது போர் தொடுத்து வருகின்றது. இஸ்ரேலின் ராணுவத்தின் தொடர் தாக்குதலினால் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் தகர்க்கப்பட்டதுடன் 45,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் இடமாற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது காஸாவில் குளிர்காலம் துவங்கியுள்ளதால் முகாம்களில் தங்கியுள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான குடியிருப்புகளும், சரியான போர்வைகளும் இன்றி குளிரலைகளினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்தம்
இந்நிலையில், காஸாவில் கடந்த 2 நாள்களுக்குள் 3 குழந்தைகள் குளிரில் நடுங்கி உயிரிழந்துள்ளன. காஸாவின் கான் யூனுஸ் நகரின் முவாஸி பகுதியிலுள்ள முகாமின் கூடாரத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்த 3 வாரக் குழந்தையான சிலா தான் அந்த 3 குழந்தைகளில் கடைசியாக தற்போது குளிரினால் உயிரிழந்தது.
இரவு முழுவதும் குளிரில் அழுதுக்கொண்டே இருந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் போர்வைகளைப் போர்த்தியுள்ளனர். காலை எழுந்து பார்த்தப்போது குழந்தை அசைவின்றி இருந்துள்ளது.
உடனடியாக, அதன் பெற்றோர் அந்த குழந்தையை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தையின் நுரையீரல் செயலிழந்து உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இரவு நேரங்களில் காஸாவில் 9 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்ப நிலை குறைந்து வருகின்றது. இதனால் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் குளிர் அலைக்கு பலியாகும் அபாயத்தில் உள்ளனர்.
இதுகுறித்து கான் யூனுஸ் பகுதியிலுள்ள நாஸர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் அஹமது அல்-ஃபர்ரா கூறுகையில் கடந்த 48 மணிநேரத்தில் குளிரலையில் பாதிக்கப்பட்டு சிலா உள்பட, 3 நாள்களே ஆன குழந்தை ஒன்றும், 1 மாதக் குழந்தை ஒன்றும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் குளிரினால் ஏற்படும் ஹைப்போதெர்மீயாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவர் கூறினார்.
காஸா நகர மக்களுக்காக வெளியிலிருந்து கொண்டு செல்லப்படும் நிவாரண பொருள்களை இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகின்றது. இதனால், குளிர் காலத்தில் அவர்களுக்கு அத்தியாவசியமான விறகு கட்டைகள், போர்வைகள், உணவுகள் என எதுவும் அவர்களை சென்றடையாமல் அங்குள்ள பாலஸ்தீனர்கள் தவிக்கின்றனர்.
நிவாரணப் பொருள்கள் அவர்களுக்கு செல்வதை இஸ்ரேல் ராணுவம் தடுக்கக்கூடாது என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதினால் தற்போது 130 லாரிகள் வரை நிவாரணப் பொருட்கள் காஸா பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இருப்பினும், அதில் வரும் நிவாரணப் பொருள்கள் அங்குள்ள பாலஸ்தீனர்களின் எண்ணிக்கையில் பாதியளவிற்கு கூட போதாது என்பது குறிப்பிடத்தக்கது.