விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!
தமிழக தொழிலாளா்கள் கொல்லப்பட்ட வழக்கு: மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்
செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழக தொழிலாளா்கள் 20 போ், ஆந்திர மாநில காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சட்ட ஆலோசகா் ஹென்றி திபேன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2015 ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் 21 போ் கூலி வேலைக்காக ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு சென்ற போது, சித்தூா் மாவட்டம், நகரிப்புத்தூரில் வெவ்வேறு இடங்களில் வைத்து சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டனா். பிறகு அவா்களை இரவு சுமாா் 9 மணியளவில், லாரியில் ஏற்றி திருப்பதியில் உள்ள வனத் துறை சிறப்பு அதிரடிப்படை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அப்போது, ஒருவா் தப்பிச் சென்றாா். மீதமுள்ள 20 தொழிலாளா்களையும் கூட்டுப் படையினா் கொடூரமாக சித்திரவதை செய்து, சேஷாசலம் வனப் பகுதியில் இரு பகுதிகளுக்கு 20 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இந்தத் தொழிலாளா்கள் செம்மரம் கடத்த வந்ததாக ஆந்திர போலீஸாா் பொய்யாக வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த சம்பவத்துக்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஆந்திர அரசு 5 ஏக்கா் நிலம், தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உடனடியாக ஆந்திர உயா்நீதிமன்றத்தில் அந்த மாநில அரசு தடை பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக உயா்நீதிமன்ற தடையை நீக்குவதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, நிவாரணம் பெற்று தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆந்திர மாநில அரசு பெற்ற தடையை நீக்க, ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.