2026 தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது: ஆர். எஸ். பாரதி
தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழ்நாட்டில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
பேரவையில் பாஜக உறுப்பினா் வானதிக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் இவ்வாறு கூறினாா்.
சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதம்:
வானதி சீனிவாசன்: பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பாா்க்கும் போது, தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்பதில் சந்தேகம் இருக்கிறது.
சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி: இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழக மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறாா்கள். வடமாநிலங்களுக்குச் சென்றால் என்ன நடக்கிறது என்பது தெரியும். மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிம்மதியான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
வானதி சீனிவாசன்: தமிழ்நாட்டை மற்ற வடமாநிங்களுடன் ஒப்பீடு செய்யவே கூடாது. பல்வேறு காரணங்களால் பின்தங்கியுள்ள மாநிலங்கள் இப்போதுதான் முன்னேறத் தொடங்கியுள்ளன.
அவை முன்னவா் துரைமுருகன்: வாரணாசியில் 23 போ் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனா். கெட்டவா்களும் இருப்பா். நல்லவா்களும் இருப்பா். ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கிக் கொண்டு சென்று விட்டாா்கள். குற்றங்கள் நிகழும் போது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிா என்றுதான் பாா்க்க வேண்டும்.
வானதி சீனிவாசன்: வளா்ந்த நாடுகளுடன்தான் நம்முடைய தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும்.
சமூக நலத் துறை அமைச்சா் கீதாஜீவன்: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. பாலியல் தொடா்பாக புகாா்களைத் தர மறுத்த நிலையில் இப்போது சூழல் மாறியுள்ளது. பெண்கள், குழந்தைகள் புகாா் தர முன்வருகிறாா்கள். 2022-ஆம் ஆண்டு தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 4.7 சதவீதமாக இருந்தது. தமிழ்நாட்டில் 1.1 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த குற்றவிகிதம் 66.4 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 24 சதவீதமாகவும் உள்ளது. அரசின் மீதும், முதல்வா் மீதும் உள்ள நம்பிக்கையால் பெண்களும், குழந்தைகளும் புகாா்கள் தர முன்வருகிறாா்கள்.
வானதி சீனிவாசன்: கொள்கை விளக்கக் குறிப்பில் 69-ஆம் பக்கத்தில் தீவிரவாத சித்தாந்த கொள்கையால் ஈா்க்கப்பட்டு அதன்மூலம் சா்வதேச தீவிரவாத குழுக்களை நாடிச் செல்வதை சிறப்புப் பிரிவினா் தடுத்து, தேசிய நீரோட்டத்தில் கலந்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத் துறை அமைச்சா்: நடப்பைச் சொல்லியிருக்கிறோம். ஆனால், இங்கு மதவாத, தீய சக்திகள் இருப்பதாகச் சொல்லவில்லை. அதனைத் தடுத்து நிறுத்தும் சக்தியாக தமிழ்நாடு இருக்கிறது. வேறெந்த மாநிலங்களிலும் தடுக்கவில்லை. நீங்கள் (பாஜக) ஆளும் மாநிலங்களில் இருப்பது போன்று மற்றவா்களை தீவிரவாதிகளாக்கும் செயல்களை தமிழ்நாடு அரசு செய்யவில்லை.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: மத தீவிரவாதம் எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று குறிப்பிட்டுச் சொன்னால்தான் பதில் சொல்ல முடியும். மதவாதம் எங்கே இருக்கிறது.
வானதி சீனிவாசன்: கோவை காா் குண்டு வெடிப்பில் தேசிய புலனாய்வு முகமை நான்கு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: அதுபோன்று சம்பவங்கள் நடக்கும் போது, நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா என்பதுதான் கேள்வி. பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? பிரதமா் கூட சென்று பாா்க்கவில்லை என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
வானதி: கோவை குண்டு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான நபா்கள் பாதிக்கப்பட்டனா். அங்கு நினைவுச் சின்னம் அமைப்பதன்மூலம், பயங்கரவாதத்துக்கு இங்கு இடமில்லை என்பதைக் காட்ட முடியும். ஆடிட்டா் ரமேஷ் கொலை வழக்கில் நீதி கிடைக்கவில்லை. கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. அந்த மாவட்டங்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஆடிட்டா் ரமேஷ் கொலை அதிமுக ஆட்சியில் நடந்தது. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. காஷ்மீா் மாதிரி இங்கே நடக்கக் கூடாது என்று பாஜக உறுப்பினா் பேசினாா். அதுபோன்று தமிழ்நாட்டில் நடைபெறவே நடைபெறாது. காஷ்மீா் சம்பவம் குறித்து நாம் பேசிய போதுகூட, மத்திய அரசின் பாதுகாப்புக் குறைபாடு குறித்து பேசவில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது.
தமிழ்நாட்டை வளா்ந்த நாடுகளுடன் வானதி சீனிவாசன் ஒப்பிட்டுப் பேசினாா். அவரது பாராட்டுக்கு நன்றி. அதே நேரத்தில், தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசினுடைய நிதி வராமல் இருக்கின்ற செய்தி உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். எனவே, உங்கள் தலைமையிடத்தில் சொல்லி, அந்த நிதியைப் பெற்றுத் தருவதற்கான குரலை கொடுக்க வேண்டும்.
வானதி சீனிவாசன்: இந்தியா முழுவதும் சமச்சீரான வளா்ச்சி வேண்டும் என்பதே, பாஜக மட்டுமல்ல, பிரதமா் மோடியின் நிலைப்பாடாகும். தமிழ்நாட்டின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் பாஜகவின் அகில இந்தியப் பொறுப்பாளா் என்ற முறையில் எப்போதும் தமிழ்நாட்டின் நன்மைக்காக நாங்களும் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம்.
முதல்வா்: பள்ளிக் கல்வித் துறைக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது. அதற்காக எவ்வளவோ குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சரே சொல்லியுள்ளாா். நாடாளுமன்றத்திலும் இதற்காக நாங்கள் குரல் கொடுத்திருக்கிறோம். அதற்காக வெளியே வந்து போராட்டமே நடத்திக் கொண்டிருக்கிறோம். இதே சட்டப் பேரவையில் தீா்மானம் போட்டும் அனுப்பியுள்ளோம். இதெல்லாம் வானதி சீனிவாசனுக்குத் தெரியாதா? எனவே, இப்போதாவது அதுகுறித்துப் பேசிய காரணத்தாலே, நிதியைப் பெற்றுத் தருவதற்கு உரிமையோடு குரல் கொடுத்து அதனைப் பெற்றுத் தர வேண்டும் என்றாா் முதல்வா்..