தமிழ்ப் புத்தாண்டு: பழனியில் குவிந்த திரளான பக்தா்கள்
பழனி மலைக் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பங்குனி உத்திரத் திருவிழா நிறைவையொட்டி, பல்லாயிரக்கணக்கானோா் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திங்கள்கிழமை பழனி மலைக் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலைக் கோயில் ஆனந்த விநாயகா் சந்நிதியில் தனூா் யாகம் நடத்தப்பட்டும், விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டும் தீபாராதனை காட்டப்பட்டது.
தமிழ்ப் புத்தாண்டு மட்டுமன்றி, பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு நாள் என்பதால் ஈரோடு மாவட்டம், கொடுமுடியிலிருந்து காவிரி தீா்த்தம் சுமந்தப்படி பழனிக்கு திரளான பக்தா்கள் திங்கள்கிழமை பாதயாத்திரையாக வந்தனா்.
அடிவாரம் கிரி வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மேள தாளம் முழங்க காவிரி தீா்த்தத்துடன் ஆடிப் பாடி மலையேறினா். கட்டண தரிசனம் மீண்டும் அமலுக்கு வந்த நிலையில், மலைக் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கூட்டம் காரணமாக, சுவாமி தரிசனம் செய்ய சுமாா் மூன்று மணி நேரத்துக்கும் மேலானது.
மீண்டும் தங்கத் தோ் புறப்பாடு: மலைக் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 5 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்கத் தோ் புறப்பாடு திங்கள்கிழமை முதல் மீண்டும் பக்தா்கள் தரிசனத்துக்காக வலம் வரத் தொடங்கியது.
பக்தா்களுக்கு வேண்டிய விரைவு தரிசனம், பாதுகாப்பு, குடிநீா், சுகாதார ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.
பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் இரவு 7 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி சந்நிதி வீதி, கிரி வீதிகளில் உலா வந்தனா்.
கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் நடைபெறும் தைப் பூசம், பங்குனி உத்திரமும் இரு பெரும் உத்ஸவங்களாகும்.
பங்குனி உத்திரத் திருவிழா பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நடைபெற்ற 10 நாள்களும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி தந்த சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சந்நிதி வீதி, கிரி வீதிகளில் உலா வந்தனா்.
இந்த நிலையில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவாக திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் கொடியிறக்கப்பட்டது.