தம்பதி வெட்டிக் கொலை: கணவரின் சகோதரா் குற்றவாளி என தீா்ப்பு
மேட்டுப்பாளையம் அருகே தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணமகனின் சகோதரா் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி மகன் கனகராஜ். சுமை தூக்கும் தொழிலாளி. இவா் வெள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி, அமுதா தம்பதியின் மகள் வா்ஷினி பிரியாவை காதலித்து வந்துள்ளாா்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், இருதரப்பு வீட்டினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அவா்கள் சீரங்கராயன் ஓடைப் பகுதியிலேயே வசித்து வந்தனா்.
இதனால், ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரா் வினோத்குமாா் தனது நண்பா்களான சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோருடன் கனகராஜின் வீட்டுக்குள் 2019-ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நுழைந்து அங்கிருந்த கனகராஜ், வா்ஷினி பிரியாவை வெட்டியுள்ளாா். படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வா்ஷினி பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸாா், வினோத்குமாா், சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இது தொடா்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், வினோத்குமாா் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை விவரம் வரும் 29-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், சின்னராஜ், ஐயப்பன், கந்தவேல் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் நீதிபதி விவேகானந்தன் தீா்ப்பளித்தாா்.