தருமபுரி குழந்தை திருமணம்: கடமையைச் செய்யாமல் இருக்க `லஞ்சம்' - பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவுக்காவிற்கு உட்பட்ட கெண்டிகானஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கிற நிர்மல்குமார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், அந்தச் சிறுமி கர்ப்பமாக உள்ளார். சிறுமியை அவரின் பெற்றோர் மகப்பேறு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமியின் வயது தெரியவந்ததும், மருத்துவர்கள் உடனடியாக சமூக நலத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அவர்கள் மூலமாக, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக சிறுமியின் குடும்பத்தினரிடம் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (வயது 50) என்பவர் ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டிருக்கிறார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சிறுமியின் தாயார், இது குறித்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிறுமியின் தாயாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று கொடுத்து அனுப்பினர்.

அந்தப் பணத்தை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம் சிறுமியின் தாயார் கொடுத்தார். லஞ்சப் பணத்தை கை நீட்டி வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்ஸ்பெக்டர் வீரம்மாளைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர்.
இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை பாய்கிறது. இந்த விவகாரம், தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.