கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசார...
தருமபுரி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 627 கோரிக்கை மனுக்கள் அளிப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். இதில் மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் உதவித்தொகை, உதவி உபகரணங்கள், பட்டா, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்களை அளித்தனா்.
இக்கூட்டத்தில் 100 சதவீதம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிக்கு ஆதாா் அட்டை, தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பள்ளி புத்தக மேம்பாட்டுத் திட்டம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற பேளார அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பென்னாகரம் அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவை வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.