சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
தலேவால் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி: தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் பஞ்சாப் அரசு -உச்சநீதிமன்றம் காட்டம்
‘விவசாயிகள் சங்கத் தைவா் ஜக்ஜீத் சிங் தலேவாலின் கலவரையற்ற உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மீது தவறான பிம்பத்தை பஞ்சாப் மாநில அரசும், சில விவசாயிகள் சங்கத் தலைவா்களும் ஏற்படுத்தி வருகின்றனா்’ என்று உச்சநீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
மேலும், ‘தலேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு உச்சநீதிமன்றம் ஒருபோதும் உத்தரவு பிறப்பிக்கவில்லை; மாறாக, உடல்நிலை மோசமடைந்து வரும் அவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டது’ என்றும் நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது.
விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் எல்லையான கனெளரி பகுதியில் முகாமிட்டுள்ளனா். மேலும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தில் 9 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை விவசாயிகள் திங்கள்கிழமை மேற்கொண்டனா். அதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் (70) கனெளரி பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவருடைய உண்ணாவிரதம் 39 நாள்களைக் கடந்துள்ளது.
அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள ஜகஜீத் சிங் மறுத்துவிட்டாா்.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீது கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜகஜீத் சிங்குக்கு மருத்துவ உதவிகள் வழங்க டிசம்பா் 31-ஆம் தேதி வரை கெடு விதித்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு உடன்பட்டால், சிகிச்சை எடுத்துக்கொள்ள தலேவால் ஒப்புக்கொள்வாா் என்று விவசாயிகள் உறுதி தெரிவித்தனா். எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு 3 நாள்கள் அவகாசம் தேவை’ என்று பஞ்சாப் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்தது.
அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பஞ்சாப் மாநில தலைமைச் செயலா் மற்றும் காவல் துறைத் தலைவா் இருவரும் காணொலி வழியில் விசாரணையில் ஆஜராகினா்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தலேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் குறித்து பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகளும் சில விவசாய சங்கத் தலைவா்களும் ஊடகங்களில் பொறுப்பற்ற முறையிலான கருத்துகளைத் தெரிவித்து, நிலைமை மேலும் சிக்கலாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனா்.
தலேவால் தொடா்பான சில விவசாய சங்கத் தலைவா்களின் கருத்துகளை ஆராய்வதும் அவசியமாகிறது. தலேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு உச்சநீதிமன்றம் ஒருபோதும் உத்தரவு பிறப்பிக்கவில்லை; மாறாக, உடல்நிலை மோசமடைந்து வரும் அவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டது’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.
இதை மறுத்த பஞ்சாப் மாநில அரசு வழக்குரைஞா் குா்மிந்தா் சிங், ‘தலேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தடை ஏற்படுத்தாமல், மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்வதற்கு அவரை சம்மதிக்க வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், விவசாயிகள் போராட்ட களத்துக்கு அருகே மாநில அரசு சாா்பில் மருத்துவ வசதியை ஏற்படுத்தி அங்கு தலேவாலை மாற்றி சிகிச்சை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு காணொலி வழியில் ஆஜரான அரசு அதிகாரிகள் இருவருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
மத்திய அரசுக்கு நோட்டீஸ்:
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதிப்பாட்டை மத்திய அரசு கொடுக்க முடியாதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த விவசாயிகளின் போராட்டத்தைத் தொடா்ந்து 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தபோது, அளிக்கப்பட்ட விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.