Dude: ``அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா தப்பு!" - தன்னுடைய உதவியாளருக்கு பிரதீ...
`தலைக்கு ரூ.60 லட்சம்' அமித் ஷா கெடு; காட்டில் 25 கி.மீ நடந்து சரணடைந்த 61 நக்சலைட் - பின்னணி என்ன?
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் இருக்கிறது. அருகில் தெலங்கானா மற்றும் சத்தீஷ்கர் மாநில எல்லைகள் இருப்பதால் மூன்று மாநில எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருக்கின்றனர்.
அவர்களுக்கு எதிராக தொடர்ந்து தேடுதல் வேட்டை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் அவர்களிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டுதான் இருந்தது.
மகாராஷ்டிராவில் நக்சலைட்களின் கமாண்டரும், அந்த அமைப்பின் மூத்த உறுப்பினருமான மல்லோஜுலா வேனுகோபால் ராவ் என்ற பூபதியை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.

அவரது தலைக்கு ரூ.60 லட்சம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் மல்லோஜுலா வேனுகோபால் தனது கூட்டாளிகள் 61 பேருடன் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளார்.
அவர் தங்களிடம் இருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கி உட்பட ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளார். பூபதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போர்நிறுத்தம் குறித்து தனது அமைப்பினரிடம் பேசியிருந்தார்.
ஆனால் அதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் தனது ஆதரவாளர்களுடன் சரணடைந்து இருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக மகாராஷ்டிரா, தெலங்கானா, சத்தீஷ்கரில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலை முன்னின்று நடத்திய பூபதி, அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளராகவும், மூத்த பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார்.
நக்சலைட்களின் ஒவ்வொரு தாக்குதலிலும் இவருக்குப் பங்கு இருந்தது. இந்நிலையில் பூபதி தனது ஆதரவாளர்கள் 61 பேருடன் நேற்று பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார்.
அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச்செல்லக்கூடிய கமாண்டோ படை கட்சிரோலியின் ஹொட்ரி என்ற கிராமத்தில் காத்திருந்தது.
பூபதி தனது ஆதரவாளர்கள் 61 பேருடன் தங்களது ஆயுதங்களுடன் மலை உச்சியில் இருந்து 25 கிலோமீட்டர் அடர்ந்த காட்டிற்குள் நடந்தே சரணடையும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர்களை கமாண்டோ படையினர் பத்திரமாக கட்சிரோலிக்கு பஸ்களில் அழைத்துச்சென்றனர்.
அவர்கள் இன்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் டிஜிபி ரேஷ்மி சுக்லா முன்னிலையில் முறைப்படி அணிவகுத்து சரணடைகின்றனர்.
அவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட 54 ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா நக்சலைட்களிடம் சரணடையும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று பூபதி தனது ஆதரவாளர்களிடம் சரணடையலாம் என்றும், மத்திய படையும், மகாராஷ்டிரா கமாண்டோ படையும் எந்நேரமும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று 61 பேர் சரணடைய முன்வந்தனர். பூபதியுடன் மற்றொரு கமாண்டர் பிரபாகரனும் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தார். ஆனால் வரும் வழியில் அவர் சில நான்கு பெண் நக்சலைட்களுடன் மாயமாகிவிட்டார்.
யார் இந்த பூபதி?
69 வயதாகும் பூபதி பி.காம் பட்டதாரியாவார். 1956ஆம் ஆண்டு பிறந்த பூபதி கல்லூரி படிப்பை முடித்த பிறகு இடதுசாரிக்கொள்கையால் கவரப்பட்டு அந்த அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இவரது சகோதரர் கொண்டெஷ்வர் ராவும் நக்சலைட் அமைப்பில் மூத்த நிர்வாகியாக இருந்தார்.

அவர் கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு பிறகு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பூபதி சரணடைவது குறித்து பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவரை சரணடைய செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
2011ஆம் ஆண்டு 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டதில் பூபதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.