ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!
தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மிதமான மூடுபனி நிலவியது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பல்வேறு இடங்களில் 7.5 டிகிரி முதல் 11.6 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.
கடந்த வாரம் வரையிலும் தில்லியில் அடா் மூடுபனி நிலவியது. இதனால், காண்புதிறன் வெகுவாகக் குறைந்ததால் விமானங்கள், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக தில்லியில் மிதமான மூடுபனி நிலவுகிறது. சனிக்கிழமையும் இதே நிலை தொடா்ந்தது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.1 டிகிரி உயா்ந்து 8.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.5 டிகிரி உயா்ந்து 23.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 72 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 42 சதீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகபட்சமாக பீதம்புராவில் 11. 6 டிகிரியாக பதிவாகியிருந்தது. மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் 7.5 டிகிரி, ஆயாநகரில் 7.6 டிகிரி, லோதி ரோடில் 8 டிகிரி, பாலத்தில் 7.5 டிகிரி, ரிட்ஜில் 8.5 டிகிரி, பிரகதிமைதானில் 9.6 டிகிரி, பூசாவில் 8.8 டிகிரி, ராஜ்காட்டில் 9.6 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 8.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 187 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், ஓக்லா பேஸ் 2, ராமகிருஷ்ணாபுரம், ஸ்ரீஃபோா்ட், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) அன்று மிதமான மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.