ட்ரம்ப்பின் நண்பர் கொலையைத் தொடர்ந்து RCB Ex கேப்டன் எழுப்பிய முக்கிய கேள்வி; என...
தலைநகரில் வீசும் தமிழ் மணம்; டெல்லி `தமிழ்நாடு இல்லம்' Spot Visit | Chanakyapuri
டெல்லி சாணக்கியபுரியில் அமைந்துள்ள தமிழ்நாடு இல்லம், வெறும் தங்குமிடம் மட்டுமல்ல, அது தமிழர்களின் கலை, பண்பாடு, மற்றும் அறிவைப் பரப்புவதற்கான இடமாகவும் செயல்படுகிறது. இங்குள்ள 'ஹவுஸ் ஆஃப் தமிழ் கல்ச்சர்' மற்றும் அதன் நூலகம், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், புதிய தலைமுறையினருக்கு நமது பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தவும் எப்படிப் பெரிதும் உதவுகின்றன என்பதை, அதன் பொறுப்பாளர் சங்கீதா பேட்டியிலிருந்து அறிவோம்.
‘ஹவுஸ் ஆஃப் தமிழ் கல்ச்சர்': ஒரு குடையின்கீழ் பல கலைகள்
தமிழ்நாடு இல்லத்தில் உள்ள 'ஹவுஸ் ஆஃப் தமிழ் கல்ச்சர்' பிரிவு, பரதநாட்டியம், தமிழ் மொழி கற்றல், நடனம், ஓவியம் மற்றும் வாய்ப்பாட்டு வகுப்புகள் எனப் பல்வேறு கலைகளை ஒரே இடத்தில் கற்றுக்கொடுக்கிறது. தமிழ் தெரியாதவர்கள் கூட ஆர்வத்துடன் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்காக, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இங்குப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்களை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமே தேர்வு செய்து அனுப்புகிறது. டெல்லியில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த வகுப்புகளில் சேரலாம் என்பது ஒரு சிறப்பம்சம். இதற்கான அட்மிஷன், வெளியீடுகள், சமூக ஊடகங்கள் மற்றும் தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (tnhouse.tn.gov.in) மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன
இந்த கலாசார வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2018-19 நிதியாண்டில் தமிழ்மொழி, இசை மற்றும் பரதநாட்டியம் ஆகிய மூன்று வகுப்புகளிலும் மொத்தம் 70 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், 2019-20 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 54 ஆகக் குறைந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும், 2021-22 நிதியாண்டில் நிலைமை சீரடைந்ததும், மாணவர்களின் எண்ணிக்கை மீண்டும் 89 ஆக உயர்ந்தது.

தொடர்ந்து, 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்மொழி, இசை, மற்றும் பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளின் மொத்த மாணவர் எண்ணிக்கை 93 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை, தமிழ்க் கலாசாரப் பயிற்சிகளின் தேவை மற்றும் வரவேற்பை தெளிவாகக் காட்டுகிறது. இதேபோல், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓவியப் பயிலரங்கிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஹவுஸ் ஆஃப் தமிழ் கல்ச்சர் பிரிவுக்கு ஆகும் செலவுகள் அனைத்தும், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுச் செயல்படுகிறது.
நூலகம் - அறிவுக் கதவு
தமிழ்நாடு இல்லத்தின் நூலகம் அறிவைத் தேடுவோருக்கு ஒரு பொக்கிஷம். தற்போது இங்கு தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டுமே நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி உள்ளது. மேலும், ஆன்லைனில் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பட்டியலை அணுக முடியும். எதிர்காலத்தில் பொதுமக்களும் இங்குள்ள புத்தகங்களைப் படிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், டெல்லியில் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என சங்கீதா தெரிவித்தார்.
சமூகப் பணிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள்
தமிழ்நாடு இல்லம், தமிழ் கலாசாரத்தைப் பேணுவதோடு, பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறது. டெல்லியில் உள்ள DTEA பள்ளிகளுக்கு நிதி மற்றும் உள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் 'மெட்ராஸ் காலனி'யிலிருந்து இடம் மாற்றப்பட்ட 110 தமிழ் மாணவர்களுக்குக் கல்வி வசதிகளை ஏற்படுத்தித் தரவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு இல்லம் பல்வேறு கலாசார நிகழ்வுகளிலும் பங்கேற்கிறது. 2019-ல் LBSNAA-வில் நடைபெற்ற தமிழ்நாடு விழாவிலும், இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த 'AT HOME' நிகழ்வில் கோலப் போட்டிகளிலும் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்றுள்ளனர். இந்தச் செயல்பாடுகள், டெல்லியில் தமிழ் கலாசாரத்தின் கொடியை உயர்த்திப் பிடிக்கின்றன.

தமிழ்நாடு இல்லம், ஒரு தங்குமிடம் என்பதைத் தாண்டி, தமிழ் மொழிக்கும், கலைக்கும், சமூகத்திற்கும் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும் இந்த இல்லம், எதிர்காலத்திலும் தமிழ்நாட்டின் பெருமையை தலைநகரில் நிலைநாட்டும் என்பதில் ஐயமில்லை.