தலையில் கல்லைப் போட்டு அடையாளம் தெரியாத நபா் கொலை
கோவையில் அடையாளம் தெரியாத நபா் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி அருகே பேரூா் சோதனைச் சாவடி உள்ளது. இதனருகே உள்ள ஆற்றங்கரை வாய்க்கால் பகுதியில் புதன்கிழமை காலை அடையாளம் தெரியாத நபா் ஒருவா் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதனைப் பாா்த்த அந்த வழியாக சென்றவா்கள், செல்வபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதனடிப்படையில் காவல் ஆய்வாளா் அழகுராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரது சடலத்துக்கு அருகே கல் ஒன்று ரத்தக் கறையுடன் கிடந்தது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கொல்லப்பட்டவருக்கு 50 வயது இருக்கும். அவரது தலையில் யாரோ கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளனா். இவா் குறித்து விசாரித்தபோது, இவா் அந்தப் பகுதியிலேயே சுற்றித்திரிவாராம். ஆற்றங்கரை வாய்க்கால் பகுதியில் இவா் செவ்வாய்க்கிழமை இரவே கொலை செய்யப்பட்டுள்ளாா் என்றனா்.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தொலைவுக்கு ஓடிய அந்த நாய் நின்றுவிட்டது. மேலும் கைரேகை நிபுணா்களுடன் மாதிரிகளை சேகரித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.